Apr 8, 2017

பேய்ப் பாட்டி


மணி ஐந்தடித்தது, ஒரு சிற்றிதழுக்கான அட்டைப்படத்திற்காக ஓவியம் தீட்டிக் கொண்டிருந்த ஆதிரை தூரிகைகளைக் கீழே வைத்தபடி “சரி தங்கம் நான் போயி விளையாடிட்டு வந்து முடிக்கிறேன்” என அட்டைப்படத்தில் சிரிக்கும் பெண்ணைப் பார்த்து சொல்லி எழுந்தாள்.  டிராக் பேண்டை மாட்டிக் கொண்டு சோஃபாவில் அமர்ந்து ஸ்போர்ட்ஸ் ஷூவை அணிந்தாள் ஆதிரை. முடிச்சுகள் போட்டபடி “மா நான் ஷட்டில் விளையாடக் கிளம்புறேன்… மணி அஞ்சரையாச்சு” என்றாள்.

கைலியை மடித்துக் கட்டியபடி “என்னத்தா கிளம்பிட்டியா” என்றபடி தன் அறைக்குள் இருந்து வந்தான் முருகன்.
“டார்ச் எடுத்துக்க வரும்போது இருட்டா இருக்கும்… பாம்பு பூரான்லாம் உன்னைப் பார்த்து பயந்துடக்கூடாதில்ல”
“ஏண்டா சொல்ல மாட்ட… அப்படிப் பார்த்தா நானில்ல வீட்டுக்குள்ள 24 மணி நேரமும் டார்ச் லைட்டோட இருக்கனும்”
“ஆமாண்டி… லவ் பண்னும்போது உன்னைப் போல ஒரு அழகனுண்டா… உன் பின்பக்கத்துக்காகவே உன்னை லவ் பண்ணலாம்டான்னெல்லாம் ஜொள்ளு விட்டது யாரு”

“ஆமா நாங்க ஜொள்ளு விட்டு இவர கமுத்துனோம்… இவரு அப்படியே கண்ணைக் கட்டிக்கிட்டு பின்னாடியே வந்தாரு..”
“கண்ணை மட்டுமாடி கட்டுன மாதிரி ஆகிட்டேன்… சர்வ நாடியுமில்லடி அடங்கிப் போச்சு.. தலைய ஆட்டி ஆட்டி நட்டு போல்டெல்லாம் லூசாகி… இப்ப அதை நிக்கவைக்க கழுத்துல ஒரு கொம்பைல்லடி முட்டு கொடுத்து கட்டிருக்கேன்”
“அப்படியா அடங்கிப் போன நாடிய நைட்டு முறுக்கேத்தி விடுறேன்… அப்புறம் நிக்க வேண்டியதெல்லாம் தானா எந்த சப்போர்ட்டுமில்லாம நிக்கும்.. இப்ப நேரமாச்சு வரட்டாடா என் செல்லப் புருஷா” என ஆதிரை செல்ல, அவள் தலை மறையும் வரை வாசலில் நின்று பார்த்துவிட்டு சிரித்துக்கொண்டே உள்ளே சென்றான் முருகன்.

மலைகளுக்கு நடுவில் செல்லும் பாதையில் பச்சைத் திரைச் சீலைகளை விலக்கிக் கொண்டு செல்வது போன்றதொரு உணர்வில் திளைத்து “மச்சான் மச்சான் உன் மேல ஆசை வச்சான்” என பாடலை முனகியபடி தன் தோழி ஹேமாவின் வீட்டிற்கு நடந்து சென்றாள் ஆதிரை. வீட்டுப் பணி, ஓவியம் தீட்டும் வேலை என தன் பணிகளுக்கு நடுவில் தனக்கென ஒரு மணி நேரத்தை தவறாமல் மாலையில் எடுத்துக்கொள்வாள் ஆதிரை. உடல்திடம், மனத்திடம் இரண்டையும் பேண அது அவசியம் என்பதில் உறுதியாக இருப்பாள்.

முருகன் அவளுக்கு நேரெதிரானவன். திட்டமிடுதல் என்னும் சொல் அவனைப் பொறுத்தவரை ஆபாசமானது. தமிழில் அவனுக்குப் பிடிக்காத சொல்லும் அதுவே. தோன்றுவதை தோன்றும் நேரத்தில் செய்பவன். எதைப் பற்றியும் கவலைப்படாத அவனைப் பார்க்கும்போது இவனது மூளையின் நரம்புகள் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டிருக்குமோ எனத் தோன்றும்.  ஆதிரையோ அட்டவனைப்படி வேலை செய்பவள். திட்டமிடுதலுக்கென ஒரு திட்டம் வைத்துச் செயல்படுபவள். எதற்கும் அஞ்சாத முருகனையே நடுக்கத்திற்குள்ளாக்கும் ஒரு வசனம் உண்டெனில் அது “முருகா வா மணி 9 ஆச்சு. இப்ப நாம பேசுற நேரம்” எனும் ஆதிரையின் இரவு நேர அழைப்பு.  அன்றைய இரவு முருகனின் கனவில் வரக்கூடிய பெண் தேவதையாகவும், பேயாகவும் இருப்பது ஆதிரையின் பழுப்பு நிறப் பற்களுக்கிடையில் அரைபடும் நாவின் சத்தத்தைப் பொறுத்தது.

“ஹேமா” என்றபடி  வாயில் கதவைத் திறந்து உள்ளே சென்றாள் ஆதிரை. புதிதாக இரண்டு செடிகள் அவளைப் பார்த்து புன்னகைத்தது. “என்ன ஹேமா புது செடிங்களா” என்றபடி உள்ளே போனாள்.

“ஆமாம் ஆதிரை வா…” என்றபடி கையில் காஃபியோடு வந்தாள் ஹேமா.

“என்ன ஹேமா இப்பதான் காஃபி குடிக்கிறியா. என்ன ஸ்கூல்ல இருந்து வர லேட்டாகிடுச்சா?”
“ஆமாம் ஆதி… வர்ற வழில ஒரே கலாட்டா… ட்ராஃபிக் ஜாம்… ஏய் உனக்கு காஃபி”
“இல்ல வேண்டாம்… ஆமா என்ன… கலாட்டாவா… என்ன பிரச்சினை. நியுட்ரினோ கூடம் வேண்டாம்… சம்பளம் பத்தலைன்னு ஏதாவது போராட்டமா. போலீசு எத்தனை பேரை சுட்டு தள்ளுச்சு”
“அட நீ வேற… அப்படி இருந்தா நான் ஏன் கலாட்டான்னு சொல்லப் போறேன்… இப்ப நடக்குற கலாட்டால்லாம் மனுஷனுக்காகவா நடக்குது… செங்கலுக்கும் மண்ணுக்குமில்ல அடிச்சுக்கிறாய்ங்க”

“என்ன ஹேமா சொல்ற”

“ஜி.எச்சுக்கு கொஞ்சம் முன்னாடி ஒரு சர்ச் இருக்கில்ல”
“ஆமாம்… ரொம்ப அழகா இருக்குமே…”
“அதேதான்… அந்த இடத்துல சர்ச் இருக்கக்கூடாதுன்னு சில காவிக்காரங்க அதை இடிக்க வந்துட்டாங்க”
“அடப் பாவிகளா… இவைங்க இப்ப நம்ம ஊருக்குள்ளையும் பட்டைய பூசிக்கிட்டு கிளம்பிட்டாய்ங்களா”   
“இவைங்க மட்டும் நடு ரோட்டுல பாதைய மறிச்சு ஒரு கோயிலக் கட்டிக்குவானுங்களாம்… ஆனா ரோட்டோரமா ஒரு சர்ச்சு இருக்கக்கூடாதுன்னு சொல்றானுகளே… ம்ம்” என காஃபியை அருந்தினாள் ஹேமா.
“சரி அப்புறம் என்னதான் ஆச்சு.. நல்லவேளை அந்த இடத்துக்கு பட்டா, அப்ரூவல் எல்லாம் இருந்ததால அந்த சர்ச்சு ஃபாதர் போலீசோட வந்து தடுத்துட்டாரு”

“ம்ம் கடைசில அந்தக் கடவுளால அவனையும் காப்பாத்திக்க முடியல… மனுஷனையும் காப்பாத்த முடியல… ஆமாம் அவரு ஏன் இப்ப இந்த மாதிரி ஆளுங்க கண்ணையெல்லாம் குத்த மாட்டேங்குறாரு?”
“அம்மா தாயே ஆரம்பிச்சுட்டியா உன் இடக்கு பேச்ச.. ஆளை விடு” என்றவள் காஃபி குடித்து முடித்து “சரி வா” என்று உள்ளே சென்று ஷட்டில் பேட் கார்க் எடுத்து வந்தாள்.
இருவரும் விளையாடத் தொடங்கினார்கள்.

மரங்கள் அதிகமாகவும் வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் அவ்வூரில் இரு பெண்கள் அதுவும் திருமணமான பெண்கள் மாலையில் விளையாடுவது

“ஏன் ஆதிரை இந்த டீவில ஏதோ ஷீன்னு ஒரு மருந்தை விளம்பரம் பண்ணாங்க… ஆமாம் அது என்ன பீரியட்ஸ் டைம்ல சுத்தம் பண்ணிக்குறதுக்கா” என்று கேட்டபடி பந்தை அடித்தாள்

சிரித்த ஆதிரை பந்தை திருப்பி அடித்து “அட நீ வேற. நம்ம xxx வீசுதாம் அதனால நம்ம புருஷனுங்க நம்மள கண்டுக்குறதில்லையாம். அந்த மருந்தை  போட்டு கழுவிக்குனா நம்ம xxx மணக்குமாம். அப்புறம் புருஷனுங்க xxxயே கதின்னு கிடப்பானுங்களாம்” என்றவள் தரையில் விழுந்த பந்தை எடுத்து

“2 ஆல்” என்று சர்வீஸ் செய்தாள்
எதிரில் வந்த பந்தை அடித்த ஹேமா “அடக் கொடுமையே… சரி அப்ப அவனுகளோடது வீசுனா..”
“ம்ம்ம் அவன் ஆம்பிளைப்பா எப்படி வீசும்…. அதுவுமில்லாம பொம்பளை முக்குல்ல… கட்டுப்பாடு வேண்டாம்”
“5 / 4”

அந்த செந்நிலம் மாலை 6 முதல் 7 மணி வரை அவ்விரண்டு பெண்களின் அரசியல் தர்பாராகிப் போகும். அவர்களது ஆதங்கங்களை மலைகள் மௌனமாகக் கேட்டுக்கொண்டிருக்கும். என்றைக்கு தீர்ப்பு வழங்குமோ தெரியாது. மலைகள் கேட்டுக்கொண்டிருப்பது அவர்களுக்கும் தெரியாது.

“சரி ஹேமா இருட்டிருச்சு… நான் கிளம்புறேன்” என பேட்டை கொடுத்தாள் ஆதிரை
“சரி நாளைக்குப் பார்ப்போம்…” என பேட்டை வைத்து டார்ச்சை கொண்டு வந்து கொடுத்தாள் ஹேமா
“வர்றேன் ஹேமா” என டார்ச்சை சொடுக்கினாள் ஆதிரை. கான்வாசில் நீல நிறப் பட்டையின் மீது சொட்ட விட்டதும் பரவும் வெண்மை போல் வெண்ணிற ஒளி அந்த செம்மண்ணில் பரவியது.

“இன்னைக்காவது அந்த பேய்ப் பாட்டி வராம இருக்கனும்” என நினைத்தவாறு ஒருவித எரிச்சலும் அச்சமும் கலந்தவாறு நடந்தாள் ஆதிரை.

ஆதிரை தினமும் விளையாடி முடித்து வரும்போதெல்லாம் இருட்டில் ஒரு கிழவி திடீரென தோன்றியவள் போல் சாலையில் நின்று கொண்டிருப்பாள். மாலை 6 மணிக்கு மேல் ஆள் நடமாட்டமே இருக்காத சாலை அது. இருள் மட்டுமே சர்வாதிகாரம் செய்யும் நேரமது. சரியாக அந்த லேம்ப் போஸ்டருகில் வரும்போது திடீரென எழுந்து நிற்பாள் அந்தப் பாட்டி. திக்கென்று தூக்கி வாறிப் போடும். இருட்டில் அவளது பழுப்பு நிற கண்கள் இரையைத் தேடும் புலி போல உருண்டுகொண்டிருக்கும். விளையாடும்போது துடிக்கும் வேகத்தை விட அப்போதி இதயம் இன்னும் வேகமாக துடிக்கும்.  அதைவிட வேகமாக நடப்பாள் ஆதிரை.

தலையில் சில நரை முடிகளும், சேலையின் வண்ணமும் தெரியவில்லையெனில் உண்மையில் புலியோ அல்லது கதைகளில் சொல்லப்படும் பேயோ நிற்பது போலவே இருக்கும். அதனால் அவளுக்குப் பேய்ப் பாட்டி என்று பெயர் வைத்திருக்கிறாள் ஆதிரை. பாம்புகளுக்கல்ல, அந்தப் பாட்டிக்கு அஞ்சியே ஆதிரை டார்ச் லைட் கொண்டு செல்ல ஆரம்பித்தாள்.

கவனமாக சாலையின் இருபுறமும் பார்த்தபடி நடந்து கொண்டிருந்தாள் ஆதிரை. சரியாக அந்த லேம்ப் போஸ்ட் வந்ததும் சட்டென எழுந்து நின்றாள் அந்தப் பாட்டி. எரிச்சலும் கடுப்பும் மேலோங்கிட “இந்தக் கிழவிக்கு என்னதான் இழவு பிரச்சினையோ தெரியலையே.. ச்சே ஏன் இப்படி வந்து நின்னு பயமுறுத்துது” என்று மனதுக்குள் திட்டியபடி வீட்டிற்குச் சென்றாள் ஆதிரை.

கதவு திறக்கும் சத்தம் கேட்டு “சுடு தண்ணி போட்டு வச்சிட்டேன். நீ குளிச்சிடு. எனக்கு இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு” என்றான் முருகன். “சரிமா” என  உள்ளே சென்றவள் குளித்து முடித்து முருகன் அறைக்கு சென்றாள். நாற்காலியில் அமர்ந்தாள். கணினியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த முருகன் சட்டென ஆதிரையின் குழப்பமான முகம் கண்டு

“என்ன ஆதிரை.. எப்பவுமே நான் பார்க்குறேன்.. போகும்போது நல்லா சந்தோஷமா விளையாடப் போற.. ஆனா வரும் போது அப்படியே ஏதோ யோசனைல வர்ற…”

ஆதிரை எங்கோ வெறித்து பார்த்தபடி இருந்தாள்

“என்ன அவ்வளவு ஹெவியா விளையாடுறீங்களா… சரி ஆரம்பத்துல ஏதோ பழகல… டையர்டா ஃபீல் பண்றன்னு நினைச்சேன்.. பட் இன்னுமா ஸ்டாமினா கூடல”.
“பச்”
“என்னமா”
“இல்ல முருகா எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல”

ஏதோ பிரச்சினை என உணர்ந்த முருகன் தன் நாற்காலியை அவளருகில் நகர்த்தி அவள் முகத்தை குனிந்து பார்த்தவன் “ஏய் ஆதிரை… என்னமா… என்னாச்சு உனக்கும் ஹேமாக்கும் ஏதாவது சண்டையா”

“ச்சே ச்சே… நாங்க எதுக்கு சண்டை போடப் போறோம்”
“அப்புறம் என்ன…” என்றவன் சட்டென “ஏய் என்ன வர்ற வழில எவனாவது”
“ச்சே ச்சே அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா.. ”
“அப்புறம் என்ன.. வர்ற வழில பேய் கீய் ஏதாவது உன்னைப் பார்த்து பயந்து ஓடி… விடு அதையெல்லாம் நினைச்சு வருத்தப்பட்டுக்கிட்டு…”
“சும்மா இரு முருகா… எப்பப்பார்த்தாலும் கிண்டல்…
“பின்ன என்ன விஷயம்னு சொன்னாத்தான தெரியும்”

அடர்ந்த இருளும் பாட்டியின் பழுப்பு நிறக் கண்களும் தீடீரென அவள் எழுந்து நிற்கும் காட்சியும் மனதில் வந்து போக சட்டென உலுக்கப்பட்டவள் போல் தன் தோள்களையும் தலையையும் உலுக்கி  எழுந்தாள் ஆதிரை. ஜன்னலை வெறித்துப் பார்த்தபடி நடந்தாள். வெறித்துப் பார்க்கும் அவளது கண்களில் தெரியும் உணர்ச்சியைப் புரிந்துகொள்ள முடியாதவனாய் “ஆதிரை ஆதிரை” என அவளருகில் வந்து அவளது தோள்களைத் தொட்டான் முருகன். நிமிர்ந்து பார்த்தாள் ஆதிரை. அவள் வரையும் கரி ஓவிய உருவப்படத்தில் கரியை தன் சுண்டு விரலால் மெல்ல தேய்த்து ஒளியும் நிழலும் கொண்டு வருவாள் ஆதிரை. அது அந்த உருவத்தின் மேடு பள்ளத்தை கனகச்சிதமாக வெளிப்படுத்தும். ஆனால் இப்போது ஜன்னல் வழியாக தெருவிளக்கின் ஒளி அவள் முகத்தில் பட்டும் ஏதோ நினைவில் வெளிறிப் போன அவளது முகம் தவறாக தீட்டப்பட்ட உருவப்படம் போன்று தட்டையாகத் தெரிந்தது.

அம்முகம் முருகனுக்குப் புதிதாய் இருந்தது. “ஆதிரை, ப்ளீஸ் பயமுறுத்தாத… என்னம்மா நடந்துச்சு… வர்ற வழில அப்படி என்னதான் பார்த்த”

“முருகன் நான் தினம் விளையாடிட்டு வரும்போது… வரும்போது… அந்த சின்ன பாலத்துக்கிட்ட….”
“பாலத்துக்கிட்ட என்ன… சொல்லு… யாரு என்ன பண்ணாங்க”
“அந்த பாலத்துக்கிட்ட இருக்குற லேம் போஸ்ட்டுக்கு பக்கத்துல தினம் தினம் ஒரு பாட்டி இருட்டுல திடீர்னு எழுந்து நின்னு என்னையே முறைச்சுப் பார்க்குது”

என்னமோ ஏதோவென்று பயந்திருந்த முருகனுக்கு இதைக் கேட்டதும் அவளை என்ன செய்வதெனத் தெரியாமல் அங்கிருந்த மேஜைமேல் குத்திய முருகன் “ஏண்டி அறிவிருக்கா உனக்கு… ஒரு பாட்டிய பார்த்ததுக்கா இப்படி”

“ஐயோ இல்ல முருகா… அந்த இருட்டுல எதுவுமே தெரியாது… திடீர்னு அந்தப் பாட்டியோட கண்ணு மட்டும் அப்படியே உருண்டுக்கிட்டு நிக்கும்…. ஏதோ என்னை புடிச்சுக்கிட்டு போற மாதிரி”

“அடச் சீ வாயை மூடு… ஆளைப் பாரு ஆளை…. நீயெல்லாம் எதுக்கு படிச்ச… ம்ம்… இதுல இருட்டையும் வெளிச்சத்தையும் திறமையா ஓவியர் வேற… ஏண்டி இருட்டுல ஒரு முகம் எப்படி இருக்கும் என்னன்னு தெரியாது உனக்கு”

கடுப்பாகி கத்தியவன் நிதானத்திற்கு வந்தவனாக “என்ன ஆதிரை நீ நான் கூட என்னமோ ஏதோன்னு பயந்து போயிட்டேன். சரி உக்காரு நான் போய் காஃபி போட்டு எடுத்துட்டு வர்றேன்” என சமயல்கட்டிற்கு சென்று அடுப்பை மூட்டினான் முருகன். யோசனையோடு ஹால் சோஃபாவில் வந்து அமர்ந்தாள் ஆதிரை. அடுப்பில் பாலை வைத்துவிட்டு ஆதிரையின் முகத்தைக் கண்டான் முருகன். இருட்டில் ஒரு முதியவளைக் கண்டதற்கா இவள் இப்படி பயந்து போய் இருக்கிறாள் என்று அவனால் நம்பமுடியவில்லை. பால் பொங்கும் சப்தம் வர தீயை சிறியதாக்கி அதில் காஃபி பொடியையும் சர்க்கரையையும் போட்டு கலக்கி இரண்டு குவளைகளில் வடிகட்டினான்.

ஒரு குவளையை ஆதிரையின் கையில் கொடுத்த முருகன் “சரி ரொம்ப யோசிக்காத. நாளைக்கு நானும் உன்கூட வர்றேன். அப்படி அந்தப் பாட்டி என்னதான் முறைக்குதுன்னு பார்க்குறேன்”
“நீ வர்றியா? எப்படி முருகா? உனக்கு அப்பதான யு.எஸ்ல இருந்து கால்ஸ் வரும்.”
“இல்ல நாளைக்கு அங்க பப்ளிக் ஹாலிடேதான். ஒண்ணும் பிரச்சினையில்ல சரியா”

ஆதிரை அவன் மடியில் சாய்ந்தாள். அவள் தலையை மெல்ல தடவிக் கொடுத்த முருகன் “சரி. மூடில்லன்னா நைட்டு சமைக்க வேண்டாம். வெளிய சாப்பிட்டுக்கலாம்.”
“இல்லமா… அதெல்லாம் ஒண்ணுமில்ல செஞ்சுடுறேன்”
“அதை அப்புறம் பார்க்கலாம்.. முதல்ல இந்த காஃபியக் குடி எழுந்துரு”
முருகன் மடியிலிருந்து எழுந்தவளாக காஃபியைப் பருகினாள் ஆதிரை

II

அடுத்த நாள் மாலை 5.30 மணி. டிராக் பாண்டை மாட்டியவனாக முருகன் “என்னமா போலாமா”.

“ம்ம்” என வெளியில் வந்து வீட்டைப் பூட்டினாள் ஆதிரை.

வீசிய காற்று சில்லென்று முருகனின் முகத்தில் பட, உடல் புல்லறித்தது அவனுக்கு. இரண்டு மலையிடுக்கின் இடையில் சூரியன் ஆரஞ்சு பந்தைப் போல் இறங்கிக் கொண்டிருந்தான். ஒரு பெண்மணி மேய்ச்சல் முடிந்து ஆடுகளைப் பத்திக் கொண்டிருந்தாள். வெள்ளைத் திரையையே பார்த்துக்கொண்டிருந்த அவனது கண்கள் நீலம், பச்சை, ஆரஞ்சு, கருப்பு, செம்மண் என பல வண்ணங்களைத் திறந்த வெளியில் கண்டதும் தாய் குருவியைக் கண்ட குஞ்சுக் குருவி போல் ஆவலாய் விரிந்தன.

“ச்சே.. வேலை வேலைன்னு வீட்டை விட்டு வெளிய வந்து ஒரு வாரமாச்சுல்ல”

“அதனாலதான் நானும் சொல்றேன். குறைஞ்சது சாய்ந்திரத்துலயாவது ஒரு மணி நேரம் வாக் போ…. தளர்த்திக்கன்னு… எங்க கேக்குற”

“பண்ணனும் ஆதிரை பண்னனும்… ” எனப் பேசிக்கொண்டே இருவரும் அந்த லேம் போஸ்ட் அருகே வந்தனர்.
“இங்கதான் முருகா” என்றாள் ஆதிரை
அந்த போஸ்டையும், சிறு பாலத்தையும் சுற்றி சுற்றி வந்த முருகன் “இங்க என்ன இருக்குன்னு அந்த பாட்டி வந்து நிக்குது… ம்ம் பஸ் ரூட்டும் இல்ல…. “
“அதான்பா… ஒண்ணும் புரியல… வாக்கிங் போற பாட்டி மாதிரியும் தெரியல”
“சரி விடு.. இன்னைக்கு பார்ப்போம்” என இருவரும் ஹேமா வீட்டிற்குச் சென்றார்கள்.

முருகனைக் கண்டதும் வியந்த ஹேமா “என்னப்பா முருகா… இன்னைக்கு மலை இறங்கிட்டியா”
“இல்லக்கா … சும்மா கொஞ்சம் ரெஸ்டு கிடைச்சுது அதான்”
“என்னமோ போப்பா… பேருக்குத்தான் வீட்ல இருந்தே வேலை செய்ற… ஆனா இருபத்தி நாலு மணி நேரமும் வேலை வேலைங்குற… என்ன வேலையோ.. என்ன வாழ்க்கையோ போ….”
“என்ன பண்றதுக்கா…. கொஞ்சம் கடன் இருக்கு… அதை அடைக்கனும்… ஒண்டுறதுக்கு ஒரு சின்ன வீட்டையாவது கட்டனும்… அதுவரைக்கும் ஓடித்தான ஆகனும்”

“அதுவும் சரிதான்… இல்லன்னா இந்த வீட்டு ஓனருங்க எப்ப துறத்தி விடுவானுகன்னு பயந்துக்கிட்டே இல்ல வாழனும்”
“அதுக்குத்தான் ஹேமா இந்தப் பாடு…”
“எல்லாம் அமையும் ஆதிரை கவலைப்படாத… சரி என்ன முருகா நீயும் விளையாட வர்றியா”
“இல்லக்கா நீங்க விளையாடுங்க.. நான் சும்மா அப்படியே காத்தாட நடந்துட்டு வர்றேன்” என்று சென்றான் முருகன்.

ஆதிரையும் ஹேமாவும் விளையாடத் தொடங்கினார்கள். இருட்டத் தொடங்கியது.

“என்ன ஆதிரை போலாமா” என்று கேட்டபடி வந்தான் முருகன்.
“வந்துட்டியா… சரி வா போகலாம்… ஹேமா நாளைக்குப் பார்ப்போம்”
“வர்றேங்கா”

“சரிப்பா” என்று பேட்டுகளை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றாள் ஹேமா.
“இப்ப டார்ச் அடிச்சுப் பாரு அங்க யாராவது இருக்காங்களா” என்றாள் ஆதிரை
டார்ச் அடித்த முருகன் “ம்ம் இல்லையேம்மா… நீ சொன்ன பாட்டியக் காணமே”
“இரு நல்லா இருட்டட்டும் அப்புறம் பாரு” என்றாள்

இருவரும் மெல்ல நடந்தார்கள். காதலியை இறுகக் கட்டிக்கொள்ளும் காதலன் போல வானத்தை இருள் இறுக்கிக் கட்டிக் கொண்டது. இலைகளின் அசைவோ, மனிதர்களின் நடமாட்டமோ ஏதும் கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு இருட்டாக இருந்தது. வானிலிருந்து கீழே விழுந்த சிறிய மேகத் துண்டைப் போல் அவர்கள் கையிலிருந்த டார்சிலிருந்து ஒளி சாலையில் விழுந்தது. இருவரும் மெல்ல நடந்தார்கள்.

பாலம் தாண்டி ஒரு ஐந்தடி தூரத்தில் அந்த லேம் போஸ்ட் இருந்தது. டார்ச்சை அங்கு அடித்தான் முருகன். சட்டென அவனது கையை விலக்கிய ஆதிரை “வெளிச்சம் பார்த்தா அந்தப் பேய்ப் பாட்டி வராது”

“ஏய் லூசு என்ன பேய் கீய்னு… ”

“ஆமாம் போ” என்றாள் ஆதிரை

திடீரென்று பழுப்பு நிறக் கண்கள் இரண்டு குறுகுறுவென சாலையின் இரண்டு புறமும் பார்த்த வண்ணம் உருண்டது. கண் விழிகள் தவிர அவ்வுருவத்தின் முகத்தில் வேறு எந்தப் பாகமும் தெரியவில்லை.

“அதோ பாரு அதோ பாரு” என்றாள் ஆதிரை

முருகன் டார்ச்சை அவ்வுருவம் நோக்கித் திருப்பினான். கருமை நிறத்தில் ஒரு முதிய பெண்மணி நின்றிருந்தாள். பின் கொசுவம் வைத்து வெளிர் நீலப் புடவைக் கட்டி இருந்தாள். பாலத்தின் அந்தப் பக்கம் எட்டி எட்டி பார்த்தவாறு இருந்தாள். இருட்டில் அவள் முகம்கூட சரியாகத் தெரியவில்லை. டார்ச்சை அவளை நோக்கி அடித்தவாறு சாலையை கடக்கத் தயாரானான் முருகன்.

“இல்ல முருகா வேண்டாம்… அது பாட்டுக்கு அடிச்சு கிடிச்சு வச்சுடப் போகுது”
“ஏய்… என்ன பேசுற நீ… அந்தம்மாவும் ஒரு மனுஷிதான… பேசாம வா” என்று ஆதிரை கை பிடித்து சாலையைக் கடக்க ஒரு அடி எடுத்து வைக்க இருந்தவனின் பக்கவாட்டில் இரு சக்கர வாகனம் ஒன்று வந்து நின்றது.
“ஏய் முருகா… இருட்டுல இங்க என்ன பண்ணிக்கிட்டிருக்க… ” எனக் குரல் கேட்க. முருகனும் ஆதிரையும் திரும்பிப் பார்த்தார்கள். ஊர் தலைவரின் மகன் பேச்சியப்பன் நின்றிருந்தார்.

“இல்லண்ணே… அந்தப் பாட்டி” என்றான் முருகன்
“ஏய்யா அதை ஆராய்ச்சி பண்னவா இப்படி இருட்டுல விளக்கு புடிச்சிட்டு நிக்க… சரி தங்கச்சியக் கூட்டிட்டு வீட்டுக்கு போ… நான் வாரேன்”
“இல்லண்ணே… அந்தப் பாட்டி இருட்டுல திடீர்னு வர்றது”
“அதான் சொல்றேன்ல… வீட்டுக்கு போய்யா… வந்து விபரம் சொல்றேன்.. தங்கச்சி போம்மா” என பேச்சியப்பன் சொன்னதால் இருவரும் வீட்டை நோக்கி நடந்தார்கள்.

III

காஃபியைக் கொண்டு வந்து பேச்சியப்பனிடம் கொடுத்தாள் ஆதிரை.

“யாருண்ணே அந்த பாட்டி. தினமும் அங்க வந்து இருட்டுல நிக்குதாம். கரெக்டா இவ வரும்போது எழுந்து நின்னு முறைக்குதாம். அதான் சரி என்ன ஏதுன்னு கேட்டுறலாம்னு…”
“அடேயப்பா பெரிய மனுஷா… பொண்டாட்டி மேல ரொம்பதாண்டா பாசம்… ஏண்டா அந்த பாட்டி உங்கள என்னடா பண்ணுச்சு”
“இல்லண்ணே… கரெக்டா இவ வரும்போது…. அதுவும் இருட்டுன்னும்போது… அதான் பயந்துட்டா… அதுவும் நெதமும் வந்து நிக்குதா”
காஃபியைக் குடித்து மேஜை மேல் வைத்த பேச்சியப்பன் “ஏண்டா தினமும் ஒருத்தரு ஒரே இடத்துல நின்னா உங்க படிப்பறிவு சந்தேகப்படச் சொல்லுது ம்ம்ம்”

ஆதிரையும் முருகனும் சங்கடத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

“அதுவும் வயசான கிழவின்னாகூட சந்தேகம்… ம்ம்… ஊருக்கு வந்து 1 மாசமிருக்குமா”
“ஆமாண்ணே”
“ஏன்யா ஏதாவது சிக்கல்னா வந்து என்ன ஏதுன்னு என்கிட்ட சொல்ல வேண்டியதுதான”
“ஏண்ணே இதெல்லாம் ஒரு பெரிய விஷயமாண்ணே… ஏன் அப்படி நிக்குறீயன்னு அந்தப் பாட்டி கிட்டியே கேட்டா விஷயம் தெரிஞ்சுறப் போகுது”

சிரித்த பேச்சியப்பன் “ஏன் முருகா இதே மாதிரி சென்னைல எவனாவது நின்னுக்கிட்டிருந்தா… சட்டுன்னு போய் என்னன்னு கேட்ருவ”
“அண்ணேன்” என்று  தயங்கினான் முருகன்
“ஏதோ யோசிக்காம செஞ்சுட்ட… இருக்கட்டும்.. ஆனா இனிமேல் எதுவா இருந்தாலும் நாலு மனுஷ மக்கா கிட்ட பேசி விசாரிக்கப் பழகு”
“சரிண்ணே… ஆமாண்ணே அந்த பாட்டி தினம் அங்க என்ன பண்ணுது?”

சிரித்த பேச்சியப்பன் அதை நாளை அவர்களே பார்த்து தெரிந்துகொள்ளுமாறு சொல்லிவிட்டு சென்றான். நாளை விளையாடுவதில்லை என்றும் வெளிச்சமாக இருக்கும்போதே அந்த பாட்டியை வேவு பார்ப்பதெனவும் இருவரும் முடிவெடுத்தனர்.

அடுத்த நாள் மாலை சூரியன் வீடு திரும்பும் நேரம் ஆதிரையும் முருகனும் கிளம்பினார்கள். பாலத்திற்கு எதிரில் இருக்கும் ஒரு சிறு மோட்டார் அரைக்குப் பின் ஒளிந்து கொண்டார்கள். அந்த லேம்ப் போஸ்ட் மீதே அவர்களது பார்வைகள் நிலை குத்தி இருந்தது. பாட்டி வருகிறாள். சூரியனோடு நேரடியாக அதிக நேரம் உறவாடுவாள் போலிருக்கிறது. அவளின் கருந்தேகத்தைக் காணும்போது சூரியன் தன் கதிர்களால் அவள் உடலெங்கும் பச்சை குத்தியிருக்கிறான் என்று எண்ணத் தோன்றும். ஆனால் அவளது கண்களுக்கு மட்டும் தன் நிறத்தை அப்படியே பரிசளித்திருக்கிறான். ஒரு நூல் புடவையைத் தவிர அவள் உடலில் வேறு ஏதுமில்லை.  புடவை நழுவி விழாமல் இருக்குமளவுக்கு எலும்பின் மேல் கொஞ்சம் தோல் ஒட்டி இருந்தது. கொசுவத்தின் மடிப்புகளைக் காட்டிலும் அவளது தோலின் மடிப்புகள் அதிகமாக இருந்தது.

பாலத்தை நெருங்கிக் கொண்டிருந்தாள் பாட்டி. இருவருக்கும் ஆர்வம் மேலிட்டது. லேம்ப் போஸ்டைத் தாண்டி நடந்தாள். அப்போதுதான் அவர்களது கண்ணுக்கு அந்தப் புதர் கண்ணில் பட்டது.

“முருகா இங்க ஒரு புதர் இருக்குங்குறதக்கூட நான் கவனிச்சதில்ல… ”
“ஆமாம் ஊரு முழுக்கப் புதராத்தான் இருக்கு. பாட்டி வெளிய போக வருது போல… இதைப் போயி நீயு”
“அப்படின்னா ஏன் இந்த இடத்துக்குத்தான் தினம் வரனும்.. அதான் ஊரு முழுக்க கரடாத்தான இருக்கு… அதுவும் சரியா இந்த நேரத்துக்கு”
“ம்ம் அதான.. அதுவும் நீ விளையாடிட்டு வர கிட்டத்திட்ட ஒரு மணி நேரமாகுது. ஒரு மணி நேரமாவா பாட்டி …. இருக்குது”

பாட்டி அந்தப் புதர் அருகில் வந்தாள்.

கையை நீட்டிய பாட்டி “போடா பேராண்டி போ… அந்த பாலத்துகிட்ட இருந்துட்டு வா” என்றாள்

ஆதிரையும் முருகனும் அதிர்ந்து போயினர். பேராண்டியா? அவள் தனியாகத்தானே வந்தாள். பேரன் எங்கிருக்கிறான்?

“என்னடா குண்டியக் காட்டிக்கிட்டு நின்னுக்கிட்டிருக்கவ… போ.. இருட்டுது பாரு… அப்புறம் பாம்பு கீம்பு வந்து உன் பொச்சைக் கடிச்சு வச்சுறப் போகுது”

ஒன்றும் புரியாமல் குழம்பிப் போனார்கள் இருவரும். பாட்டி யாரோடு பேசுகிறாள் என எட்டிப் பார்த்தனர். அங்கிருந்து ஒரு 10 கி.மீ தொலைவு வரை யாருமே இருக்கவில்லை.

“எலேய்… என்னலேய்… உன்னோட நெதமும் இதே ரோதைனையாப் போச்சு… ஏன்லே உனக்குப் பீ வரணும்னா அதுக்கு நானும் உக்காரணுங்குறியே… எப்பத்தாண்டா இந்த பழக்கத்தை விடுவ”

“ஐயோ முருகா… என்ன முருகா இது” என தவித்தாள் ஆதிரை

“சரி… இந்தா நான் இந்த புதருக்குப் பின்னாடி இருக்கேன்… நீ அங்கிட்டு இரு… மடப் பய மவனே….” என்றவள் புதருக்குப் பின் மறைந்தாள்.

நிலா பணிக்கு வந்துவிட்டது. ஆதிரை கைக் கடிகாரத்தைப் பார்த்தாள். மணி 6.50. அவள் விளையாடி முடித்து வீடு திரும்பும் நேரம். அதேபோல் பாலத்தின் எதிரில் இருக்கும் சாலைக்கு வந்தாள் ஆதிரை. முருகன் பின் தொடர்ந்தான். சரியாக அந்த லேம்ப் போஸ்ட் அருகே வந்தபோது புதரின் மறைவிலிருந்து புடவையை கீழிறக்கியபடி வெளியே வந்தாள் பாட்டி. பார்ப்பதற்கு அவள் திடீரென்று எழுந்து நிற்பது போன்றே இருந்தது. ஆதிரை முருகனைத் திரும்பிப் பார்த்தாள். மெல்ல தலையசைத்தான் முருகன்.

ஆனால் வழக்கம் போல் அவளைக் கடக்காமல் இருவரும் அவ்விடத்திற்கு முன்பே நின்று என்ன நடக்கிறது என்பதை கவனித்தார்கள்.

“ஆச்சால்லே…. எம்புட்டு நேரம் பேலுவ… அப்படி என்னத்தை தின்ன… கல்லையா தின்ன… வா வா நேரமாச்சு” என்றவள் மீண்டும் கையை நீட்டியபடி நடந்தாள். கூட ஒரு குழந்தையைக் கையைப் பிடித்து நடத்தி செல்வது போல் இருந்தது அது. இருட்டில் மறைந்து போனாள்.

நடப்பதைப் புரிந்துகொள்ள முடியாமல் குழம்பி நின்றனர் இருவரும். பேச்சியப்பன் வந்து பைக்கை நிறுத்தினார். “என்ன முருகா… என்ன பார்த்த”

“அண்ணேன் அந்த பாட்டி.. பேராண்டின்னு… ஆனா கூட யாருமே இல்ல… பாவம்ணே பைத்தியம் போல… நாங்கதான் தப்பா நினைச்சுட்டோம்…”

“இன்னும் தப்பாத்தாம்யா நினைச்சுக்கிட்டிருக்கீய” என்றார் பேச்சியப்பன்
“என்னண்ணே சொல்றீக… பின்ன தானா ஏதோ பேசிக்கிட்டு…”

IV

“அசால்ட்டா பைத்தியம்னு யாரையும் சொல்லிறாதீய” என்று சற்று முன்னால் சாய்ந்து அமர்ந்தர் பேச்சியப்பன். ஃபேன் சுச்சை தட்டிய ஆதிரை “தப்புத்தாண்ணே…. சொல்லுங்க… அந்த பாட்டி ஏன் அப்படி நடந்துக்குது” என்று கேட்டு எதிரில் சோஃபாவில் அமர்ந்தாள். முருகனும் ஆவலாய்ப் பார்த்தான்.

“ரொம்ப கொடுமையான கதை தங்கச்சி அது”.

V

அந்தப் பாட்டியின் பெயர் வேலம்மாள். மூன்று தலைமுறைகளாக இந்த புதுப்பட்டியில் வாழ்ந்து வருபவள். அவளது அம்மாச்சி ஆடு மேய்த்தாள். வேலம்மாள் ஆடு மேய்த்தாள். அவளது மகள் ஒச்சம்மாளும் ஆடு மேய்த்தாள். ஒச்சம்மாளுக்கு ஒரே ஒரு மகன். பெயர் செல்ல பாண்டி. ஒச்சம்மாள் கணவன் பால்பாண்டி கே.ஜி. பால் பண்ணையில் மாடுகளைக் குளிப்பாட்டுபவன். ஒச்சம்மாளும் பால்பாண்டியும் வேலைக்குச் சென்ற பின்னர் செல்ல பாண்டி வேலம்மாளின் முந்தாணையைப் பிடித்துக் கொண்டே திரிவான்.

“எலேய்.. மத்த புள்ளைய மாதிரி வெளிய போயி விளையாடு… எதுக்கு இந்த இத்துப் போன முந்தானையவே புடிச்சுக்கிட்டு திரியுறவ…”
“அப்ப நீயும் கூடவா அம்மாச்சி”
“ஆமாமுடா… ஓடி ஆடி விளையாடுற வயசு காலத்துலதாண்டா இருக்கேன்… ஆளைப் பாரு ஆளை.. போடா முதல்ல வெளிய” என அவனை வெளியே தள்ளிய வேலம்மாள் “சரியா 12 மணிக்கு இஸ்கூலு மணி அடிக்கும்.. அப்ப வா வீட்டுக்கு… போடா…. என் பொட்டச்சி பெத்த மவனே…” என உள்ளே சென்று கதவை சாத்தினாள் வேலம்மாள்.

“காலைல கரட்டுக்குப் போகனும்னாலும் நான் வேணும்… விளையாடனும்னா நான் வேணும்…  காளியாத்தா 4 வயசாகப் போகுது… இவனுக்கு… பள்ளிக் கூடம் அனுப்பனும்… ஹும் எப்படித்தான் இவனை மாத்துவனோ தெரியலையே…”
“அம்மாச்சி… அம்மாச்சி… உன்னை விட்டு நான் போமாட்டேன் அம்மாச்சி.. கதவைத் திற அம்மாச்சி” என அழுதுகொண்டே நின்றான் பாண்டி.

நைசாக ஜன்னலோரம் வந்து எட்டிப் பார்ப்பாள் வேலம்மாள் கிழவி. எதிரில் இருந்த கல் ஒன்றின் மேல் கால்களை அகட்டி இரு பாதங்களையும் தன் கைகளால் பிடித்தபடி அமர்ந்தான் பாண்டி. தலையில் அடித்துக்கொண்டாள் கிழவி.

புழக்கடை வாயிலில் கடந்து சென்ற சுசீலாவைக் கண்ட வேலம்மாள் “ஏந்த்தா சுசீலா… உன் மவன்கிட்ட சொல்லி அந்தப் பயல கொஞ்சம் விளையாடக் கூட்டிட்டு போகச் சொல்லேன்..”
“யாரு… உன் பேரனையா…. ஆத்தா… ஆளை விடுத்தா…. உனக்கு எம்மேல கோவம்னா ரெண்டு அடிகூட அடிச்சுக்கோ… ஆனா உன் பேரனை இங்கருந்து அகட்டுற வேலைய மட்டும் செய்யச் சொல்லாத… அவனுக்குப் பயந்துதான இந்த தெருவுக்குள்ள இருக்குற அத்தனை கல்லையும் நாங்களே வாரி கொண்டு போய் 10 மைலுக்கு அந்தால போட்டுட்டு வந்தோம்… நீயாச்சு உன் பேரனாச்சு… சரியான அம்மாச்சி பய” என்று சென்றாள்.

தன்னோடே இப்படி ஒட்டிக்கொண்டு திரிகிறானே… விளையாடக் கூட செல்ல மாட்டேன் என்கிறானே என்று தவித்த கிழவி ஒரு நாள் அவனை வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லும்படி சுசிலாவின் மகனிடம் சொன்னாள். சுசீலாவும் மிகுந்த அக்கறையோடு தன் மகன் ராஜாவை அழைத்துக் கொண்டு வந்தவள் “ஏ கிழவி எங்க அந்த அம்மாச்சி” என்றாள். எதிரில் கை காட்டினாள் வேலம்மாள். வீட்டுக்கு எதிரில் இருந்த கல்லில்  கால்களை அகட்டி இரு பாதங்களையும் தன் கைகளால் பிடித்தபடி அமர்ந்தான் முருகன். “இங்கதான் இருக்கியா தம்பி… எலே ராஜா இதோ இருக்கான் பாரு… வா” என்றவள் முன்னால் சென்று “தம்பி செல்லபாண்டி… ஏன்யா இப்படி அம்மாச்சியவே ஒட்டிக்கிட்டு திரியுற… போயி உன் வயசுப் பசங்களோட விளையாடுப்பா…”

செல்லபாண்டி அவளையே உற்று பார்த்தான்.

“டேய் பாண்டி வாடா… நாம ஐஸ் பாய்சு, கிட்டி புள்ள, கொருக்களிக்கா முந்திரிக்கா எல்லாம் விளையாடலாம்” என அவன் கையைப் பிடித்து இழுத்தான்.

“அய்யோ அம்மா” என அலறல் சத்தம் கேட்டது.  ராஜா 2 அடி தள்ளி விழுந்து கிடந்தான். அதிர்ந்தாள் கிழவி. “யய்யா பாண்டி” என ஓடி வந்தாள். “ஏலேய் எதுக்குடா அவனை தள்ளி விட்ட… விளையாடுனா உன் உடம்புக்குத்தானய்யா நல்லது… போ… கொஞ்ச நேரம் விளையாடிட்டு வா” என்றாள் சுசீலா.

மாட்டேன் என்று தலையசைத்தான் முருகன். “அம்மாச்சி எங்கய்யா போகப் போகுது. இங்கதான் இருக்கும்… நீ போ… டேய் ராஜா கூட்டிட்டு போடா” என்றாள் சுசீலா.

ராஜா சற்று பயத்தோடு “வா பாண்டி” என்றான் அவனைத் தொடாமல்.

குத்துக்கல் போல் நின்றிருந்தான் செல்லபாண்டி. இதற்கு மேல் பொறுக்க முடியாதவளாய் சுசீலா “ஏய் கிழவி.. நீ முதல்ல உள்ள போ… நீ இங்கையே நின்னுக்கிட்டிருந்தா… அவன் எப்படி நகருவான்… போ உள்ள” என வேலம்மாளை வீட்டின் உள்ளே தள்ள வேலம்மாளின் தோளைப் பற்றினாள் சுசீலா. பின் மண்டையில் பெருங்கல் ஒன்று வந்து விழுந்தது “அய்யோ ஆத்தா மகமாயி” என்று திரும்பினாள் சுசீலா. கொலை வெறியோடு நின்றிருந்தான் பாண்டி. கழுத்தில் ஈரமாக ஏதோ உணர்ந்தவள் தன் கைகளை பின்னால் வைத்தாள். இரத்தம் வடிந்துக்கொண்டிருந்தது.

“அடப்பாவி… ஏண்டா விளையாட கூப்டதுக்காடா என் மண்டைய உடைச்ச… பாவி பாவி..”

“ஐயோ சுசீலா.. ” என்று பதறிய வேலம்மாள் தன் முந்தானையைக் கிழித்து “உக்காருடி இப்படி உக்காரு” என்று அவளை அமர்த்தி இரத்தம் வரும் இடத்தை அழுத்திப் பிடித்தாள். “அம்மா வலிக்குதாம்மா” என்று அவளருகில் வந்து அமர்ந்தான் ராஜா. தலையைக் குனிந்தபடி நின்றிருந்தான் பாண்டி.

“எலேய் கிறுக்கப் பய மவனே… இரு இன்னைக்கு உன் கைய்ய உடைக்குறேன்” என்றாள் வேலம்மாள். “அவனை அடிச்சு மட்டும் என்னா செய்யப் போற… கிழவி… அவன் இந்த சென்மத்துல உன்னைய விட்டுட்டு எங்கையும் போக மாட்டான்… எல்லாம் உன் வளர்ப்பு அப்படி” என்று எழுந்தவள் “சரி.. நான் டாக்டரை பார்த்துக்குறேன்… அவனை உள்ளக் கூட்டிட்டு போயி சோத்தைப் போடு… டேய் ராஜா வாடா” என்று நடந்தாள் சுசீலா.

கண்களில் கண்ணீர் இறங்க என்ன செய்வதெனத் தெரியாமள் நின்றிருந்தாள் வேலம்மாள். “அம்மாச்சி பசிக்குது” என்று அவள் இடுப்பைக் கட்டிக் கொண்டு நின்றான் பாண்டி.

நினைவு கலைந்தவளாக ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பார்த்தாள் வேலம்மாள். அப்படியே உட்கார்ந்திருந்தான் பாண்டி. முடிவெடுத்தவளாக கதவைத் திறந்தாள் கிழவி “எலேய் எடுபட்ட மவனே… செல்லபாண்டி… இப்ப என்ன உன்கூட நானும் வரனும்… அதான… சரி வா..” என்று தன் கூந்தலை கொண்டையாய் முடிந்தவளாக அவனைக் கூட்டிக் கொண்டு மைதானத்திற்குக் கிளம்பினாள் வேலம்மாள்.

“ஹை.. அம்மாச்சி நீயும் வர்றியா… ஹை ஹை… என் செல்லம்” என அவளது கொழு கொழு கன்னத்தை கிள்ளி முத்தமிட்டு… அவளது சுண்டு விரலை பற்றிக்கொண்டு குதித்தபடி நடந்தான் பாண்டி. தெருவே அவர்களது பிணைப்பைக் கண்டு சிரித்துக்கொண்டது.

“அம்மாச்சி அம்மாச்சி போற வழில 10 காசு ரவுண்டு அப்பளம் வாங்கித் தர்றியா”. “முதல்ல நீ நல்லா விளையாடு… அப்புறம் வரும்போது நான் வாங்கித் தாறேன்.. நாலு பயலுகளோட விளையாடிப் பழகுனாத்தான் நீ மாறுவ.. வா.. உன்னைய எப்படி வழிக்குக் கொண்டு வாரதுன்னு எனக்குத் தெரியும்”

“ஆங் அஸுக்கு புசுக்கு… நீ கூட வந்தாத்தான நான் எங்கையும் போவேன்”

அவன் மாறிவிடுவான் என்ற நினைப்பில் வேலம்மாள் தினமும் அவனோடு நடையாய் நடந்தாள். கரடானாலும், மைதானமானாலும், சந்தையானாலும் அவள் வராமல் செல்லபாண்டி எங்கும் செல்ல மறுத்தான். அவன் பள்ளியில் வேலம்மாளுக்கென்று ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. வகுப்பறையிலிருந்து பார்த்தால் தெரியும்படி அவனது கண் பார்வையில் வேப்பமரத்தின் கீழ் உட்கார்ந்திருப்பாள் வேலம்மாள் கிழவி. தலைமை ஆசிரியரின் காலில் விழாத குறையாக கெஞ்சி அதற்கு அனுமதி வாங்கி இருந்தாள். காலப் போக்கில் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் தலைமை ஆசிரியரும் அதற்கு அனுமதி வழங்கி இருந்தார்.

வேலம்மாளோடு இப்படியே நிழல் போலவே ஒட்டிக்கொண்டு திரிந்தான் செல்லபாண்டி. அன்று செப்டம்பெர் 11. 2011. பள்ளி முடிந்து பாண்டியை அழைத்துக்கொண்டு வீடு திரும்பியிருந்தாள் வேலம்மாள்.

“போயி கை கால் கழுவிட்டு வாய்யா… அம்மாச்சி காபி போடுறேன்” என்றாள்.

கை கால்களைக் கழுவிவிட்டு வந்து அமர்ந்த பாண்டி தொலைக் காட்சியை முடுக்கினான். அலைவரிசைகளை மாற்றிக் கொண்டே இருந்தான்.

“எலேய்… ஏதாவது ஒரு சானல வைடா… “
“போ அம்மாச்சி” என்றவன் ஒலியையும் கூட்டி வைத்து அலைவரிசைகளை மாற்றிக் கொண்டே இருந்தான். இரைச்சல் பொறுக்க முடியாமல் கிழவி “ஐயோ… இந்தப் பையனோட” என்று காஃபியோடு வர
விழுந்து விழுந்து சிரித்த பாண்டி “நீ அதைச் சொல்லனும்னுதான் அம்மாச்சி அப்படி செஞ்சேன்” என ஒலியைக் குறைத்தான் முருகன். “அது என்னதுடா கிறுக்கா”

“அதான் சொல்லுவியே ஐயோ…. இந்த பையனோடன்னு” அப்படி சொல்லும்போது நீ ரொம்ப அழகா இருப்ப அம்மாச்சி என்று அவள் கன்னத்தைக் கிள்ளினான் பாண்டி.

“அட என் தங்கம் பெத்த மவனே… இம்புட்டு கோளாறானவனாடா நீயு… சரி சரி காஃபியக் குடி… அம்மாச்சி சத்த நேரம் படுக்குறேன்…” என்று மெத்தையில் அமர்ந்தவள் “மூட்டெல்லாம் வலிக்குதுய்யா.. ஒரே அசலாத்தியா இருக்குது” என்று மெத்தையில் சரிந்தாள் வேலம்மாள். அவள் உடல் சோர்வு கண்டு வருந்திய பாண்டி “ரொம்ப வலிக்குதா அம்மாச்சி” என அவளது கால்களை அமுக்கி விடத் தொடங்கினான்.

“யய்யா.. நீ ஏன்யா இதெல்லாம் செய்ற… முதல்ல காஃபியக் குடி… அப்புறம் வீட்டுப் பாடத்தை முடி.. போ”
“இருக்கட்டும் அம்மாச்சி… காஃபி ஆரட்டும்… நான் குடிக்குறேன்… நீ தூங்கு” என்று அவளது கால்களைப் பாதங்களை அழுத்தி விட்டான் பாண்டி. அசந்து தூங்கிப் போனாள் கிழவி.

காஃபியைக் குடித்து முடித்து… புத்தகங்களை எடுத்து அமர்ந்தான் முருகன். வயிறு கலக்குவது போல் உணர்ந்தான்.

“அம்மாச்சி ஆய் வருது அம்மாச்சி… வா கரட்டுக்கு போயிட்டு வருவோம்” என்றான். ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள் வேலம்மாள். இடியே விழுந்தாலும், பாண்டியின் மூச்சுக் காற்று பட்ட அந்த உணர்வில் சட்டென விழித்துப் பார்ப்பவள் வேலம்மாள். “என்ன அம்மாச்சி இன்னைக்கு இப்படி தூங்குது” என்று அவள் முகத்தை நெறுங்கிப் பார்த்தான் பாண்டி.
என்றுமில்லாமல் அன்றைக்கு அவளது உடல்நிலையை முதல் முறையாக உணர்ந்தான் முருகன்.

“ச்சே அம்மாச்சிக்கு… முடியல போல… நாந்தான் அதை ரொம்ப படுத்துறேன்… என்கூட நெதமும் நடந்து நடந்துதான் அதுக்கு மூட்டு வலி வந்துருச்சு போல” என்று நினைத்தவன் அவளருகில் சென்று “சரி அம்மாச்சி… இனிமேல் உன்னை தொல்லை பண்ண மாட்டேன்… என்ன… நானே தனியா போயிட்டு… தனியா வந்துக்குறேன்… நீ இனிமேல் என் கூட எங்கையும் வரவேண்டாம்… என்ன” என்று அவளது கன்னத்தில் முத்தம் வைத்து எழுந்தவன். மெல்ல நகர்ந்து கதவைச் சாத்தி விட்டு வெளியே சென்றான்.

வழக்கமாக வேலம்மாள் கூட்டிச்செல்லும் அந்தச் சின்ன பாலத்திற்கு பின்னால் சென்று அமர்ந்தான். கழிந்துகொண்டிருந்தான். திடீரென்று அந்தச் சாலையில் கற்கள் வந்து விழுந்தன. ஆண்களும் பெண்களுமாய் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள். காவல் துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியபடி, தண்ணீரைப் பீய்ச்சி அடித்தபடி அவர்களைத் துறத்திக் கொண்டிருந்தார்கள். நாலாப் பக்கமும் கூட்டம் சிதறி ஓடியது. திடீரென துப்பாக்கிச் சூடு கேட்டது. முருகன் கழிந்து கொண்டிருந்த சின்ன பாலத்தை நோக்கி ஒரு கும்பல் ஓடியது. சத்தம் கேட்டு பயந்தவனாக செல்லபாண்டி தன் அரைக்கால் சட்டையைச் சரி செய்து கொண்டு எழுந்தான்.

கூட்டம் கூட்டமாக ஆட்கள் சிதறி ஓடிக்கொண்டிருந்தார்கள். பாலத்திற்கு கீழ் இருந்த ஆறு தண்ணீர் வரத்தின்றி தோண்டப்பட்ட பெரும் பள்ளம் போல் காட்சியளித்தது. இருபுறமும் கருவேலம் மரங்களும், முட்புதர்களும் மண்டிக் கிடக்க மேற்கொண்டு எத்திசையிலும் ஓட முடியாமல் கூட்டம் சாலையை நோக்கித் திரும்பியது. எதிர்கோஷ்டியின் தாக்குதலில் இருந்து தப்பிக்க தற்காப்பிற்காக அங்கிருந்த சில கட்டைகளைப் பொறுக்கிக் கொண்டு ஓடியது அக்கூட்டம்.

கட்டையோடு ஓடி வருபவர்களைக் கண்ட காவல்துறை அவர்களை நோக்கி சரமாரியாகச் சுட்டது. ஆட்கள் வேகமாக ஓடினர். “அம்மாச்சி அம்மாச்சி” என அழுது கொண்டே நின்றான் பாண்டி பாய்ந்து வந்த குண்டொன்று அச்சிறுவனின் நெஞ்சைப் பிளந்து சென்றது.

“உன்னை விட்டு நான் எங்கையும் போக மாட்டேன் அம்மாச்சி… அம்மாச்சி” என்று அழுதபடி அந்தப் பீக்காட்டில் விழுந்தான்.
VI
கண்களில் கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டிருந்தார்கள் ஆதிரையும் முருகனும்.

“கிழவிய விட்டு ஒரு நிமிஷம் கூட அகலாத அந்தப் பையன்… அன்னைக்குத்தான் மொத மொறையா தனியா வெளிய வந்தான்… படுபாவிப் பசங்க…”
“முருகா” என்று தேம்பி தேம்பி அழுதாள் ஆதிரை

“நான் பெருசா… நீ பெருசான்னு… ரெண்டு சாதிக்காரங்க அடிச்சுக்கிட்டதுல… சாதியும் தெரியாத உலகமும் தெரியாத ஒரு அப்பாவிக் குழந்தை செத்துப் போச்சு…” என்று கண்ணைத் துடைத்தார் பேச்சியப்பன். 

“விஷயத்தைக் கேள்விப்பட்டதும் வேலம்மாள் கிழவிக்கு ஈரக் கொலையே அத்துப்போற மாதிரி ஆயிடுச்சு. தான் அசந்து தூங்கிட்டதாலதான் பேரன் தனியாப் போனான் அதனாலதான் அவன் செத்துட்டன்னு வாயிலையும் வயித்துலையும் அடிச்சுக்கிட்டு அந்தம்மா கத்துன கத்து இன்னும் என் காதுல ஒலிச்சிக்கிட்டிருக்கு முருகா”

தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள் ஆதிரை. ஒரு மடக்கு தண்ணீர் குடித்த பேச்சியப்பன்.

செல்லபாண்டி செத்து கிடந்த அந்த இடத்துக்கு வந்து அவன் விழுந்து கிடந்த நிலைமையப் பார்த்த கழவி “என் பேரனை நான் கொன்னுட்டேன்… என் பேரனை நானே கொன்னுட்டனே… பாவி முண்டைக்கு… அப்படி என்ன தூக்கம் வேண்டிக் கிடக்குன்னு நெஞ்சுல அடிச்சுக்கிட்டு உருண்டு பிரண்டு அழுதா”

“அழுது முடிச்சவ இல்ல ராசா இனிமேல் உன்னை நான் எங்கையும் தனியா அனுப்ப மாட்டேன் ராசா… யய்யா செல்லபாண்டின்னு கத்திக்கிட்டே சரிஞ்சவதான் நினைவு திரும்ப ஒரு வருஷமாச்சு”

“ஐயோ.. அண்ணேன்… என்ன சொல்றீய… அப்ப அந்தப் பாட்டி நினைவு இழந்து கிடந்துச்சா”
“ஆமாம் முருகா… அதை விடக் கொடுமை… மகன் இறந்த துக்கம் தாங்காம அவன் அப்பனும் ஆத்தாளும் விஷத்தை குடிச்சுப்புட்டாக”

ஆதிரைக்கும் முருகனுக்கும் மூச்சு முட்டியது. “அண்ணே அப்ப அந்த பாட்டி இப்ப..” என்றாள் ஆதிரை

“தனியாதான் இருக்கு தங்கச்சி. அக்கம் பக்கத்துல உள்ளவக அதை பார்த்துக்குறாக.  நெதம் சாயங்காலம் செல்லபாண்டி வீட்டை விட்டு கிளம்புன நேரத்துக்கு கிளம்பி அந்த பாலத்துகிட்ட வந்துடும்”

“சரி… இந்தா நான் இந்த புதருக்குப் பின்னாடி இருக்கேன்… நீ அங்கிட்டு இரு… மடப் பய மவனே….” என்றவள் புதருக்குப் பின் மறைந்தாள்.

கொற்றவை

19.4.2015

No comments:

Post a Comment