Aug 9, 2016

சாதியப் பிரச்சினை - விவாதத் தொடர்ச்சி

சாதி என்றால் மேல் கீழ் அடுக்குகளாக மக்களை வகைப்படுத்தும் ஓர் அதிகார ஏற்பாடு.
மார்க்சிய விளக்கம் / விரிவாக்கம்: சாதி என்பது உழைப்புப் பிரிவினையின் அடிப்படையில் மேல் கீழ் அடுக்குகளாக மக்களை வகைப்படுத்தும் ஓர் அதிகார ஏற்பாடு.
உற்பத்தி முறையில் மாற்றங்கள் ஏற்படும்போது - உண்டாகும் உழைப்புப் பிரிவினையின் விளைவாக - உண்டாகும் சமூகப் பிரிவிகளின் முரண்பாடுகளிலிருந்து - உருவாகும் ஒரு சமூக ஏற்பாடு அல்லது சமூக அமைப்பு. இந்த முரண்பாடுகள் இணக்கம் காண முடியாததன் விளைவாக தோன்றுவதே அரசு.
உற்பத்தி முறையின் வரலாற்று வளர்ச்சியை கார்ல் மார்க்ஸ் பல்வேறு காலகட்டங்களாகத் தொகுத்துக் கொடுத்துள்ளார். ஒருகட்டத்தில் அது தனியுடமையை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தி முறையாக நிலைகொள்கிறது. தனியுடைமையை அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்பிற்கேற்ற வகையில் - அதாவது உற்பத்தி முறைக்கேற்ற வகையில் - அச்சமூகத்தில் சட்டதிட்டங்கள் உருவாகின்றன.
இந்திய சமூகத்தில் அது சாதி எனும் தனித்துவமான ஒரு சட்டதிட்டமாக உருவானது. பிறப்பின் அடிப்படையில் அது உழைப்புப் பிரிவினையை சட்டதிட்டமாக்கியது. அதை நடைமுறைப்படுத்திட பல கருத்தியல்களை வகுக்கிறது. அதிகார, கலாச்சார நிறுவனங்களை ஏற்படுத்துகிறது. சாதி - தீண்டாமை - பிறப்பின் அடிப்படையிலான பகுப்பு என்பதெல்லாம் அத்தகைய கருத்தியல் வடிவங்கள் / சட்டதிட்டங்கள். மதம் நீதித்துறை, இராணுவம் போன்றவை அவ்வதிகார அமைப்பின் நிறுவங்கள். சட்டதிட்டங்களை கருத்தியில் ரீதியாக புகுத்துவதற்கு மதம் - மதநூல்கள், புராணக்கதைகள் பயன்படுத்தப்படுகின்றன.
அதிகார வர்க்கமானது (அரசின் தலைமையில்) புரோகிதர்கள் அல்லது மதபோதகர்கள் அல்லது மதம் மூலம் கருத்தியல் தாக்கங்களை, சட்டதிட்டங்களை உருவாக்குகிறது, நடைமுறைப்படுத்துகிறது. அதேபோல் நீதித்துறை, இராணுவம் போன்றவையும் அதில் ஈடுபடுத்தப்படுகின்றன.
இந்திய சமூகத்தில் அம்மதமானது பிராமணிய மதமாக இருக்கிறது - பிராமணிய கருத்தியலை அடிப்படையாகக் கொண்ட இந்து மதம். அம்மதம் போதித்த கருத்தியல்கள், சட்டதிட்டங்கள் (மநுஸ்ம்ருதி போன்றவை) காலம் காலமாக வேறூன்றி கிடக்கின்றன. சாதி எனும் வடிவில் உடல் உழைப்பாளர்களை, குறிப்பாக துப்புறவு பணி செய்யும் உழைப்பாளர்களை, கடுமையான உடல் உழைப்பில் ஈடுபடுபவர்களை இழிவான நிலையில் வைப்பதற்கான ஓர் ஏற்பாட்டை அது செவ்வனே செய்து மக்களை பிரித்தாளும் ஏற்பாட்டில் வெற்றியும் கண்டுவிட்டது.
அடிப்படையில் உழைப்புப் பிரிவினையாகவும், மேல்மட்டத்தில் சாதியாகவும் தோன்றும் இந்த பார்ப்பனிய இந்து மதக் கோட்பாடு (ஏற்பாடு) உழைக்கும் வர்க்க மக்களின், அதிலும் குறிப்பாக துப்புறவு பணி மற்றும் கடுமையான உடல் உழைப்பைக் கோரும் உழைப்பில் ஈடுபடும் மக்களின் கொடுமையான நிலைக்கு மிக முக்கியமான காரணமாக இருக்கிறது.
உழைப்புப் புரிவினை என்பது ஏற்றத்தாழ்விற்கான அடிப்படைக் காரணம் - இது பொருளாயதக் காரணம். சாதி என்பது நடைமுறை - இது கருத்தியல் வடிவம். இதுபோல் பால், இனம், மத மற்றும் இதர ஏற்றத்தாழ்வுகளும் நடைமுறை - கருத்தியல் வடிவங்கள்.
இதில் சாதிக்கெதிரான போராட்டங்கள் என்பது நடைமுறையை எதிர்கொள்ளும் கருத்தியலுக்கெதிரான போராட்டமாகும். தனியுடைமையை அடிப்படையாகக் கொண்ட உழைப்புப் பிரிவினையை - தனியுடைமையை எதிர்க்கும் போராட்டம் என்பது மேற்சொன்ன கருத்தியல் ரீதியான போராட்டங்களுக்கான அடிப்படையை தகர்ப்பதற்கான போராட்டமாகும். இதில் எது முதன்மையானது, எது இரண்டாம்பட்சமானது எனும் கேள்விக்கே இடமில்லை. (அப்படி இடமிருப்பதாக நானும், ரங்கநாயகம்மாவும், வசுமித்ரவும் எங்கேயும் சொல்லவில்லை). இரண்டும் அல்லது ஒவ்வொரு ஒடுக்குமுறைக்கும் எதிரான போராட்டங்கள் எல்லா மட்டங்களிலும் நடைபெற வேண்டும். ஆனால் ஏற்றத்தாழ்விற்கான அடிப்படையை (அடிக்கட்டுமானத்தை) சரியாகப் புரிந்துகொள்வதன் மூலம் நாம் பொது எதிரியை சரியாக அடையாளம் காண முடியும். அதுமட்டுமின்றி சரியான செயல்திட்டங்களை வகுக்க முடியும். நிரந்தரமான மாற்றத்தை இலக்காக வைத்து முன்னேற முடியும்.
மார்க்சிய வழிகாட்டி இதுவே. கட்சிகள், அமைப்புகள் ஆகியவற்றின் தவறுகளுக்கோ அல்லது போதாமைகளுக்கோ தத்துவம் பொறுப்பாகாது. ஆனால், தத்துவமே தவறாக இருப்பின் நாம் அதனை எதிர்க்கலாம், விமர்சிக்கலாம், ஒழிக்க போராடலாம் - இந்து மதம் முன் வைக்கும் தத்துவங்கள் அத்தகையவை என்பதால்தான் நாம் தத்துவத்தையே அடிப்படையில் எதிர்க்கிறோம். அதேபோல் மார்க்சியத்தை தவறாக சித்தரிக்கும் நபர்கள் அல்லது தத்துவங்கள் குறித்தும் நாம் விவாதிக்க வேண்டியுள்ளது, விமர்சிக்க வேண்டியுள்ளது.
மார்க்சியம் அளிக்கும் இந்த சமூகக் கண்ணோட்டத்தை ஏற்பவர்கள் ஏற்கலாம், அல்லாதவர்கள் அவரவர் சரியனெக் கருதும் பாதையில் செல்லலாம். ஆனால் எது சரியான பாதை என்று விவாதிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு.
சாதி போன்றே பெண் விடுதலைக்கான பாதையில் எது சரியான பாதை எனும் பிரச்சினை உலக அரங்கில் காலம் காலமாக நடந்து வருகிறது. ஏனென்றால் அங்கும் மார்க்சியக் கண்ணோட்டமானது முதலாளித்துவம் போதிக்கும் பெண் விடுதலை சிந்தனையிலிருந்து மாறுபட்டதாக இருக்கிறது. அதனை விளக்கும் விதமாக நான் எழுதிய கட்டுரையில் உள்ள அடிப்படை அம்சங்கள் இங்கு சாதிய விவாதத்திற்கும் பொருந்தும். அதை மீண்டும் பகிர்கிறேன்.
ஒடுக்குமுறையில் மேல் கீழ் - முதல், இரண்டு, மூன்று என்று வரிசைகள் உள்ளன. ஆனால் போராட்டங்களில் அப்படி இருக்க முடியாது. மார்க்சியம் அதைத்தான் சொல்கிறதே ஒழிய அது வன்முறையை போதிக்கவோ அல்லது வெறும் பொருளாதாரத்தையோ பேசவில்லை. ஆனால் பொருளாதாரம் - பொருள் உற்பத்தி மற்றும் அது தொடர்பான செயல்பாடுகள் இன்றி மனித உறவுகள் அமைவதில்லை. ஆகவே மார்க்சியம் என்பது வெறும் பொருளாதார நிர்ணயவாதமில்லை. அது பொருளாயதக் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு சமூகத்தைப் புரிந்துகொள்வதற்கான ஒரு சமூக விஞ்ஞானம்.

No comments:

Post a Comment