Feb 21, 2014

உறுதியாக ஓர் கொலை


மரணித்தல் ஒரு கலை
என்றாள் சில்வியா
ஊதா நெருப்பிற்கு
தன் தலையை
தின்னக் கொடுத்தாள்

குற்றவாளியென
நெற்றியில் பதித்து
சிறைக் கம்பிகளை
எண்ணக் கொடுத்தனர்

சுவாமிகள்
ஆல்வாக்கள்
ராவ்கள்
சந்திரசேகரர்கள்
இப்படியாக
காந்திகளும்

இருண்ட கறிய
சுவர்களுக்கு மத்தியில்
மூத்திரத்தை மட்டுமே சுவாசித்து
பெண் வாசம் அறியாது
கழிந்த என் இளமை இரவுகள்
எனக்குச் சொல்கிறது
வாழ்தலின் சுவையை
அறியாது
மரணித்தல்
தண்டனையென்று

சிறையறையின் தூசுகளை
சிலந்தியின் எச்சில் கோடுகளை
துடைக்கும் எனது கைகள்
சொல்கிறது
அம்மாவை அணைத்து உறங்காது
மரணித்தல்
இழப்பென்று

மக்களின் வரிப் பணத்தில்
பீரங்கிகள் வாங்கி
குடிகளை வறுமைக்கு
தினம் தினம்
பலி கொடுக்கும்
வாரிசுகள்
உயிரோடிருக்கையில்
என் உதடு சொல்கிறது
குற்றமற்ற
நான்
மரணித்தல்
அநீதியென்று

விரும்பி மரணித்தல்
கலையோ
நானறியேன்

குற்றஞ்சாட்டப்பட்டு
தூக்குக் கயிர் பெற்று
மரணித்தல்
உறுதியாக
ஓர் கொலை


No comments:

Post a Comment