Nov 15, 2012

வீட்டுப் பராமரிப்பு செய்யும் மனைவிகளுக்குச் சம்பளம்



வீட்டுப் பராமரிப்பு செய்யும் மனைவிகளுக்குச் சம்பளம்
கருத்துரை
ரங்கநாயக்கம்மா
தமிழாக்கம் கொற்றவை


மனைவிகளுக்குச் சம்பளம் அல்லது வெகுமானம்! ஏனென்றால் அவர்கள் வீட்டு வேலை செய்கிறார்கள்! பெண்களை நிரந்தரமாக வீட்டு வேலை செய்யப் பணிக்கப்பட்டவர்கள் என்று முடிவுகட்ட நினைக்கிறதா அரசாங்கம்? இந்த பிரச்சனைக்கு  சரியான தீர்வைக் காணும் முன் நாம் நம்மைச் சிலக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும். கணவன் மனைவிக்கு சம்பளம் கொடுக்க கடமைப்பட்டவரானால், மனைவியும் கணவனுக்குச் சம்பளம் கொடுக்கலாமா? ‘கணவன்மார்களுக்கு எதற்கு சம்பளம் கொடுக்க வேண்டும்?’ என்று நீங்கள் வியப்பு கொள்கிறீர்களா, மேலும் படியுங்கள்!

மனைவி செய்யும் வீட்டுப் பராமரிப்பை கணவன் ஒன்றும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லைஅதற்கு பதில் அவர் குடும்பம் முழுமைக்குமானவாழ்வுத் தேவையைபூர்த்தி செய்கிறார். உழைப்புப் பிரிவினை ஏன் தொடங்கியது, ‘வீட்டு வேலை என்பது பெண்களுக்கும்’ ‘வெளி வேலை என்பது ஆண்களுக்கும்என்று எவ்வாறு முடிவு செய்யப்பட்டது எனும் வரலாற்று காரணிகளுக்குள் நாம் இப்போது செல்ல வேண்டாம்வரலாற்று நடைமுறை என்னவாக இருந்தாலும், அதே வேலைப் பிரிவினை இப்போதும் தொடர்கிறதுஅது சிறிய உடல் உழைப்பானாலும் சரி, மருத்துவர் போன்ற அறிவார்த்த பெரிய உழைப்பானாலும் சரரி, வெளியில் செய்யும் வேலைக்கப்பால் பெண்கள்தான் வீட்டு வேலையும் செய்ய வேண்டும். (பெரும் வருமானம் கொண்ட பெண்கள் வீட்டு வேலைக்கு ஆள் வைத்துக் கொள்கிறார்கள். அவர்களை இப்போதைக்கு ஒதுக்கி விடுவோம். வெளியில் வேலைக்கும் செல்வதில்லை, வீட்டு வேலை முழுவதையும் தாங்களாகவே செய்யும் பெண்களைப் பற்றி பார்ப்போம்).

குடும்பத்தில் உள்ள பாலின உறவுக்கு (கணவன் மனைவி உறவு) இரண்டு தன்மைகள் உண்டு (1) உழைப்புசார் உறவு (labour relations) மற்றும் (2) உடல் உறவு (physical relations). முதலில் நாம்உழைப்புசார் உறவைஆய்வு செய்வோம். சமையல், சுத்தம் செய்தல், குழந்தை பராமரிப்பு ஆகியவை வீட்டு வேலை என்பதில் அடக்கம்எல்லாவிதமான வீட்டுப் பணிக்கும்சமையல்என்பதை உருவகமாக எடுத்துக் கொள்வோம். மனைவி எல்லா வீட்டு வேலைகளையும் செய்கிறாள். மனைவி தயாரிக்கும் உணவு விற்பனைக்கில்லை. அவை சுய தேவைக்காக நுகரப்படுகிறதுமனைவியின் உழைப்பு பணமாக உருமாற்றம் பெறாததால் அது விற்பனையில் சேர்த்தி இல்லை, மனைவிக்குப் பணம் கிடைப்பதில்லை. (’வீட்டு வேலைஎன்பது சமூகத்தில் அன்றாடம் நிகழும்மொத்த உழைப்புஎன்றாலும் அது பணமாக மாறுவதில்லை.) மறுபுறம், கணவன் ஒரு எஜமானனுக்குப் பணி புரிகிறான்எதுவாகினும், அவனது உழைப்பு பொருளை உற்பத்தி செய்கிறது, அவனது எஜமானனிடமிருந்து தனது உழைப்பிற்கு அவன் சம்பளம் (பணம்) பெருகிறன். இதன் தொடர்ச்சியாக, வீட்டில் செலுத்தும் உழைப்பு பணமாக மாறுவதில்லை, அதை ஆண் செய்தாலும், அதேவேளைவெளி வேலைபணமாய் மாறுகிறது, அதை பெண் செய்தாலும்

கணவன் மனைவி மனித உயிரியில் சமம்தான். எல்லோரும் அவர் அவர் உழைப்பில் தான் வாழ வேண்டும்வீட்டுப் பராமரிப்பில் சில வாழ்வுச் சாதனங்கள் (means of subsistence) மாதாந்திர அடிப்படையில் தேவைப்படுகிறது, அதேவேளை சில வீட்டுப்பராமரிப்பு வேலைகளை செய்தேயாக வேண்டும்வாழ்வுச் சாதங்களைச் சம அளவில் கொடுப்பதென்பது கணவன் மனைவி இருவருக்குமான பொறுப்பு. அதேபோல் வீட்டுப் பராமரிப்பை சம அளவில் செலுத்த வேண்டும். ’சம அளவுஎன்று சொல்லும் போது அதை ஒரு அளவை கொண்டு அளக்க வேண்டும் என்பதல்ல, ஆனால் விசயத்தைப் புரிந்து கொள்ளசம அளவுஎன்பதை பயன்படுத்தியாக வேண்டும்குடும்பத்தை நிர்வகிக்கும் செலுவுக்கான பொருளை கணவன் உழைப்பில் ஈட்ட வேண்டும், வீட்டுப் பராமரிப்பு மனைவின் உழைப்பில் நடைபெற வேண்டும் என்பதே பல்லாண்டுகாலமாக நிலவி வரும் ஆண் பெண் இடையிலான வேலைப் பிரிவினை.  (வீட்டு வேலைக்கு பணியாளை வைத்துக் கொண்டால், கணவனின் உழைப்பிலிருந்து அதற்குரிய சம்பளம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அப்போது மனைவின் உழைப்பு குறைகிறது).

உழைப்பு சார் உறவில் எது முதன்மை நிலை, எது இரண்டாம் நிலை என்பதை வேறுபடுத்திக் காண்பது அவசியம்கணவன் மனைவிக்குள்ளாகவும்உழைப்பு சார்உறவு இருக்கிறது. எஜமானரிடம் கணவனின் உழைப்பு 8 மணி நேரம் என்றால், வீட்டில் மனைவியின் உழைப்பு நேரமும் 8 மணி நேரம் என்று இருந்தால் அநீதியில்லை. ஆனால் சமூக/வீட்டுக்குரிய உழைப்பில்தான் உண்மையான அநீதி நிலவுகிறது.

வீட்டு வேலையை செய்வதற்கான வாழ்வுச் சாதங்கள் முதலில் கணவனின் உழைப்பின் மூலம் உறுதி செய்யப்பட வேண்டும். ‘வீடுஎன்ற ஒன்று இருப்பதால் தான் அதை சுத்தம் செய்யும் தேவை ஏற்படுகிறது. அரிசி இருந்தால் தான் சமைக்க முடியும். துணிகள் இருக்கும் போது துவைத்தல் தொடர்கிறதுகணவனின் உழைப்பின் வாயிலாக வாழ்வுச் சாதங்கள்உறுதி செய்யப்படாமல் போனால் மனைவியால் தனது வேலையைச் செய்ய முடியாதுவேறு சொற்களில், மனைவியின் உழைப்புத் தேவைக்கானஉழைப்பு சாதனத்தைகணவனின் உழைப்பு பெற்று தருகிறதுஅந்த சாதங்களைக் கொண்டே மனைவி உழைப்பைச் செலுத்த முடிகிறதுஆனால் கணவனின் வேலையோ எஜமானனின் பணி இடத்தில் உள்ளஉழைப்புச் சாதனம்கொண்டு செய்யப்படுகிறது. (அந்த உழைப்புச் சாதங்கள் எஜமானனின் உழைப்பால் தோன்றியதில்லை என்பது வேறு விசயம்.) மனைவி வீட்டில் செய்யும் வேலையின் அடிப்படையில் வெளியில் கணவனின் உழைப்பு செலுத்தப்படுவதில்லை. மனைவி செய்யும் வீட்டு வேலையானது கணவனுக்கானஉழைப்புச் சாதனமாகமாறுவதில்லை. கணவன் மனைவியிடையே நிலவும் உழைப்புசார் உறவைப் பார்த்தோமேயானால், கணவனின் உழைப்பு என்பது முதன்மைக் காரணி, அதேவேளை கணவனின் உழைப்பைச் சார்ந்திருக்கும் மனைவியின் உழைப்பு இரண்டாம் காரணிஇதைப் புரிந்து கொள்வதில் ஜில்லியன் கணக்கில் தவறுகள் நிகழ்கின்றன.

அதில் ஒருவகையான தவறு: கணவன் வெளியில் உழைப்பு செலுத்துவது வீட்டில் மனைவி செலுத்தும் உழைப்பால் தான் நீடிக்கிறது என்றும், மனைவியின் உழைப்பு முதன்மைநிலை, கணவன் உழைப்பு இரண்டாம் நிலை என்றும் சிலர் விவாதம் செய்கின்றனர்இந்த விவாதத்தின் மீது நாம் ஒரு கேள்வியை எழுப்ப வேண்டும். அப்படியென்றால் மனிவியின் உழைப்பு நீடித்திருப்பதற்கான அடிப்படை என்ன? இன்றைக்கு வீட்டு வேலை செய்ய முடிவதற்கான ஆற்றல் நேற்றைய வாழ்வுச் சாதங்கள்பூர்த்தி செய்யப்பட்டதன் விளைவு.  அந்த தேவையை பூர்த்தி செய்தது கணவனின் உழைப்பு.  இதைவைத்துப் பார்க்கும் போது கணவனின் உழைப்பே மனைவியின் உழைப்புக்கு அடிப்படை. நாம் காலச்சக்கரத்தில் பின்னோக்கி நகர்ந்தோமானால், கணவன் மனைவி என்று உறவுமுறை அமையாத காலத்திற்கு செல்ல நேரும்.  அப்போது, ஒரு இளம் பெண்ணின் உழைப்பு ஆற்றல் அவளது தந்தையின் உழைப்பு பூர்த்தி செய்த வாழ்வாதாரத் தேவையாலும், தாய் செய்த வீட்டு வேலையின் விளைவாலும் கிடைத்திருக்கும். ஒரு இளம் ஆணின் விசயத்திலும் அதே தான் நடந்திருக்கும்.  அப்படியே அவர்களின் பெற்றோரின் உழைப்பு சார் உறவின் காரணத்தை தேடிச் சென்றோமானால், நாம் அவர்களின் பாட்டன் காலத்திற்கு செல்வோம். காலத்தின் முனைக்குச் சென்றாலும், நாம் ஆணி வேரைக் கண்டடைய முடியாது.

கணவன் மனைவி இடையே இருக்கும் உழைப்புச் சார் உறவை ஆய்வதற்கு இரண்டு வகையான உழைப்பு இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டால் போதும்.  கணவன் பூர்த்தி செய்யும் வாழ்வுச் சாதங்கள்என்பதே மனைவியின் உழைப்புகான உழைப்புச் சாதனம். இங்கு கணவனின் சூழல் மாறுபட்டது.  கணவன் தான் குடும்பத்தைப் பராமரிக்கிறான். மனைவி அந்த பராமரிப்பைச் சார்ந்து இருக்கிறாள். (பண்டைய பழங்குடிச் சமூகத்தில் பெண் தான் பராமரிப்பவளாக இருப்பாள், இங்கு அது பொருத்தமானதல்ல) நாகரீக மனித சமூகத்தில் ஆண் பெண் இருவருக்கும் இடையே நிலவுவது சமமற்ற வேலைப் பிரிவினை.   இதன் அடிப்படையில், ஆணை விட பெண்ணின் நிலை தாழ்ந்து இருக்கிறது.  ஆனால் இந்த அடிமை முறையில் எஜமானன் மிகை உழைப்பினாலோ அல்லது மிகை மதிப்பினாலோ லாபம் அடைவதில்லை. ஆனாலும் இது ஏற்றத்தாழ்வே.

ஒரு சமூகத்திற்கு வீட்டு வேலை, வெளி வேலை இரண்டும் அவசியம். இந்த வேலைகளின் தீவிரத்தை சற்று குறைக்கலாமே ஒழிய, அதை முற்றிலுமாக நாம் ஒழித்து விட முடியாது.  இந்த சமமற்ற வேலைப் பிரிவினையை சரி செய்ய, ஒரு மாறுதல் கொண்டு வரப்பட வேண்டும். அதன் மூலம் ஒருவர் மற்றொருவரை சார்ந்திருக்கும் நிலை இருக்காது.  அந்த மாறுதலானது ஆண், பெண் இருவருக்கும் வீட்டு வேலை, வெளி வேலை என்பதை சமமாக்க வேண்டும்.  இரண்டு பேருமே இரண்டு உழைப்பிலுருந்தும் வருமானம் பெற முடிவதாக இருக்க வேண்டும்.

கணவன் வீட்டில் வேலை செய்வதற்கு, அவன் வெளியில் செய்யும் வேலையின் நேரம் குறைக்கப்பட வேண்டும். மனைவி வெளியில் சென்று வேலை செய்ய அவளது வீட்டு வேலை நேரம் குறைக்கப்பட வேண்டும்.  ஒரு வேளை  கணவன், தன் எஜமானனிடம் “உங்களுக்கு என்னால் 8 மணி நேரம் வேலை செய்ய முடியாது. 5 மணி நேரம் மட்டுமே வேலை செய்வேன்” என்று சொன்னால் ஏற்றுக் கொள்வாரா எஜமானர்.  “அப்படியா, சரி, நீ விட்டிற்கே சென்று விடு. 8 மணி நேரமும் வீட்டிலேயே வேலை பார்க்கலாம்!” என்று சொல்வார்.  வெளியில் கணவனது வேலை நேரம் குறையாத வரை, அவன் வீட்டில் ஒரு துரும்பைக் கூட அசைக்க மாட்டான்.  மனைவி வெளியில் சென்று வேலை செய்ய இயலாது. அப்படியே செய்தாலும், வீட்டிலும் அவள் தான் வேலை செய்ய வேண்டும்.  எஜமானன் தொழிலாளி உறவில் மாற்றம் ஏற்பட்டால் ஒழிய, கணவன் மனைவி உறவில் மாற்றம் ஏற்படாது.

கணவன் மனைவிக்கு சம்பளம் தரவேண்டும் என்பதை ஒரு உரிமையாகப் பேசினால், எதற்காக அவன் கொடுக்க வேண்டும்.  வீட்டு வேலைகளில் பாதியக் கூட கணவன் செய்வதில்லை என்று வாதம் செய்தால், வாழ்வாதாரத் தேவையை மனைவி பாதியைக் கூட பூர்த்தி செய்யவில்லை என்பதால் மனைவியும் கணவனுக்கு சம்பளம் தர வேண்டாமா?

வழக்கமாக ஒரு நாள் தொடங்குகிறது, கனவன் வாழ்வாதாரத் தேவையை பூர்த்தி செய்வதற்கு மாற்றாக மனைவி பணம் கொடுக்க கடமைப் பட்டிருக்கிறாள். அதேபோல், மனைவி வீட்டு வேலை செய்வதற்காக கணவன் பணம் கொடுக்க கடமைப் பட்டிருக்கிறான். விடிந்தவுடன் யார், யாருக்கு முதலில் பணம் தர வேண்டும். கனவன் வாழ்வாதாரத் தேவையை பூர்த்தி செய்வதைக் கொண்டு தான் மனைவி வீட்டு வேலையைத் தொடங்குகிறாள், அதனால் மனைவி தான் முதலில் பணம் தர வேண்டும். அவள் எங்கிருந்து தருவாள்? அந்த சாதனங்களை அவள் கடனாகப் பெறவேண்டும். அதேபோல் மனைவி வீட்டு வேலையை முடித்தவுடன் கணவனும் அவளுக்குப் பணம் தர வேண்டும். ஆனால் மனைவி ஏற்கணவே சிறுது பணம் கணவனிடம் கடன் பட்டிருக்கிறாள். கணவன் தான் பணம் வைத்திருப்பதால் மனைவிக்கு பணம் கொடுத்து விடுகிறான், மனைவியும் வாழ்வாதாரத் தேவையை கணவனிடமிருந்து கடனாகப் பெற்றதை கொடுத்து கடனை அடைக்கிறாள்.

எல்லாவிதமான வீட்டு வேலையும் உடல் உழைப்பே. துடைப்பத்தில் தொடங்கி, வீட்டு வாடகை வரை எல்லா வாழ்வாதாரத் தேவையையும் கணக்கிட வேண்டும். அதேபோல் அரிசி, துனிமணி, குழந்தைகள் படிப்பு, சினிமாவுக்கு செல்லுதல், மனைவிக்கு, குழந்தைக்கு நகை வாங்கித் தருதல் இவை எல்லாவற்றிற்கும் ஆகும் செலவை மொத்தமாக கணக்கிட வேண்டும், அதிலிருந்து ஒரு நாளைக்குச் செலவாகும் செலவில் பாதியை கணக்கிட வேண்டும்.  அதேபோல் மனைவியும் தனது வீட்டு வேலையின் மதிப்பை கணக்கிட வேண்டும். கணவனும் உடல் உழைப்பாளியாக இருந்தால் மட்டுமே இருவரும் ஒருவருக்கொருவர் சமமாக கூலி கொடுத்துக் கொள்ள வேண்டும். கணவன் மூளை உழைப்பாளியாக இருந்தால், கணவன் பூர்த்தி செய்யும் வாழ்வாதாரத் தேவையின் மதிப்பின் அளவினால், மனைவியின் வீட்டு வேலை மதிப்பு குறைவாகவே இருக்கும்.  இதனடிப்படையில், கணவனுக்கு கடன்பட்டிருக்கும் பணத்தை மனைவியால் முழுமையாக திருப்பிக் கொடுக்க இயலாது. இதன் பொருள், மனைவி எப்போதும் கணவனுக்கு கடன் பட்டவளாகவே இருப்பள்.

இரட்டை உழைப்பு செலுத்தும் பெண்களின் வீட்டில், கணவனும் வீட்டு வேலை செய்வானா? அவன் செய்யவில்லை என்றால், மனைவி அவனிடம் உரிமையுடன் சம்பளம் கேட்க முடியாதா? கணவன் மனைவி இரண்டு பேரும் வேலை செய்யும் வீடுகளில் வீட்டுப் பணியாளர்கள் இருப்பர் (உடல் உழைப்பினால் வாழும் குடும்பங்களில் அல்ல).  அதனால் மனைவிக்கு வீட்டு வேலை குறைவாகத்தான் இருக்கும். வீட்டு வேலை செய்யாமல் கணவன் மனைவிக்கு சம்பளம் தரும் தீர்வைப் பரிசோதித்தால் அது கணவன்மார்களுக்கு வீட்டு வேலையிலிருந்து விலக்கு அளிக்கிறது. பழைய வேலைப் பிரிவினையை நிலைத்திருக்கச் செய்கிறது.

உடல் உறவைப் பொறுத்தவரை, அதை பணம் கொண்டு எளிதில் கணக்கிட்டுவிட முடியாது.  அது ஆண் பெண் இருவருக்கும் சம அளவு தேவை. இருந்தாலும், பண பரிவர்த்தனையாக இந்த விசயத்தைக் காணும் சில வக்கிர வாதங்களும் வைக்கப்படுகின்றன. அந்த விசயத்திற்காகவும், கணவன் மனைவிக்கு சம்பளம் தரவேண்டும் எனும் வகையிலான வாதமது. உடல் உறவு பண உறவாக மாறுமேயானால், அங்கு மனைவி விலைமகளாகவும், கணவன் கள்ளக் காலதலனாகவும் மாறுகிறான். அப்படி அது பண உறவாக மாறும்போது மனைவி ஏன் குடும்பக் கள்ளக் காதலனோடு மட்டும் நிறுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல் கணவனும் ஏன் வீட்டு விலை மகளிடம் மட்டும் பணம் செலவழிக்க வேண்டும். இந்த மாதிரியான விவாதங்கள் கேடு கெட்ட மூளைகளால் மட்டுமே வைக்க இயலும். அதன் மறுபெயர், பூர்ஷுவா வாதம்! இந்த விவாதத்தின் இலட்சியம் பணம். இவர்களுக்கு இயல்பான உணர்ச்சி, அன்பு, சுயமரியாதை ஆகியவை புரிவதில்லை. அதனால் அதை பொருட்படுத்தத் தேவை இல்லை.  இந்த விசயத்தில் உழைப்புசார் உறவை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டும்.  அதுவே உண்மைப் பிரச்சனை.  இந்த வேலைப் பிரிவினை முறையில் மனைவி எப்போதும் கடனாளியாகவும், கணவன் கடன் கொடுப்பவராகவுமே இருக்கின்றனர். கணவன் கடன் பெறுவதில்லை.  ஒருவேளை மனைவிகளுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும் எனும் உன்னத முயற்சிகளை அரசு எடுக்குமானால் (ஓட்டு வங்கியை குறி வைத்து), அது எங்கிருந்து இதற்கான பணத்தை பெறும்? அது கணவனின் சம்பளத்திலிருந்து எடுத்துக் கொடுக்க வேண்டும். தனது சம்பளத்தில் ஒரு பகுதியை இழக்க கணவன்மார்கள் தயாராக இருப்பார்களா?

தெலுங்கில் ஒரு சொலவடை உள்ளது, கம்பளியில் உட்கார்ந்து உண்ணும் போது உணவிலிருந்து தலைமுடியை பிரித்தெடுப்பது போல் என்று. இத்தீர்வுகள் அப்படித்தான் உள்ளது. வேலைவாய்ப்பு, சமத்துவத்திற்கான அவா, ஆண்கள் சிந்தனையில் மாற்றம், புரட்சிகர சிந்தனை இவையெல்லாம் இல்லாமல் போனால், இது பிச்சை அன்றி வேறில்லை.

அரசாங்கம் மனைவிகளுக்கு வெகுமானம் வழங்குவதாய் இருந்தால், அது தனது வருமானத்திலிருந்து தர வேண்டும்.  அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள், மாற்றுத் திறனாளிகள், இயலாமைக்கு தள்ளப்பட்டவர்களுக்காக செலவழிப்பது போல் அரசு செலவழிக்கட்டும்.  கணவன் மீது அந்த பொறுப்பை அரசு சுமத்தாதவரை பரவாயில்லை! அரசுக்கு எந்த உழைப்பையும் செலுத்தாமல், மனைவிகள் அரசிடம் இருந்து சம்பளம் வாங்கினால், அத்தகைய மனைவிகள் அனாதை-இல்லத்தரசிகளிக்கு ஒப்பானவர்கள்.  இல்லத்தரசிகளுக்கு மரியாதை நிமித்தமாக வெகுமானம் என்று அரசு கூறுமேயானால், அவர்கள் பெண்களுக்கு நிரந்தரமாக வீட்டு வேலையை ஒதுக்க நினைக்கிறதா? அதுதான் பெண்ணுக்கான சரியான மரியாதையா?

ஆண் ஆணுக்கும், பெண் பெண்ணுக்கும் கண்மூடித்தனமாக ஆதரவு தெரிவிப்பது சரியல்ல. நாம் உண்மையான நிலமைகளைக் காண வேண்டும்.  இப்போது நிலவும் ஆண் பெண் உறவு அதி சிறந்தது, தூய்மையானது என்றில்லையானாலும்கூட, அதற்குள் சம்பளம் என்ற ஒன்று நுழையுமானால் அது எஜமானன் தொழிலாளி மற்றும் விலை மகள், கள்ளக் காதலன்  உறவாகிப் போகும்.

குறிப்பு:

 பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வீட்டுப் பராமரிப்பு செய்யும் பெண்களுக்கான வரைவுச் சட்டம் ஒன்றை தயாரித்து  வருகிறது. வீட்டுப் பராமரிப்பைச் செய்யும் கணவன்மார்களின் சம்பளத்திலிருந்து 10 முதல் 20 சதவிகிதத்தை மனைவியின்  பெயரில் வங்கியில் சம்பளமாகப் போடவேண்டும் என்பதே அப்பரிந்துரை.  இந்த வரைவு பாராளுமன்றத்தில் இன்னும் 6 மாத காலத்தில் தாக்கல் செய்யப்படும் என்று பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கன மத்திய அமைச்சர் கிருஷ்னா தீரத் தெரிவித்துள்ளார்.

 மேலோட்டமாகப் பார்த்தால் இவ்வரைவு பெண்களுக்கு நலம் செய்யும் ஒரு பரிந்துரையாகத் தோன்றும். உண்மையில் இது அப்படியல்ல.  இல்லத்தரசிகளுக்கான அந்த சம்பளத்தை தரப்போவது கணவன்மார்கள். இதன் மூலம் வீட்டுப் பராமரிப்பு என்பது பெண்களுக்கானது எனும் கருத்தாக்கம் வழி மொழியப்படுவதோடு, கணவனாகிய குடும்பத் தலைவன் முதலாளியாகவும், மனைவி அடிமையாகவும் வீட்டு வேலையாளாகவும் கருதப்படுவாள். இது பெண்களின் சுயமரியாதையை குலைத்து, நிலப்பிரபுத்துவ தந்தைவழிச் சமூக வரையரையின் கீழ் பெண் / பெண்மை என்பதற்கான கடமைகளுக்கு அடி பணிந்து செல்வதை மட்டுமே நிறுவுகிறது. தன்னுடைய கடமைகளிலிருந்து விலகிச் செல்ல அரசு இத்தகைய பரிந்துரைகளை கண்துடைப்பாக கொண்டுவர முயல்கிறது. ஆணைச் சார்ந்து வாழ்வதிலிருந்து பெண்ணுக்கு விடுதலை அளிக்க பெண்களுக்கான வேலை வாய்ப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். இந்த பரிந்துரையை பல பெண்ணியலாளர்கள் எதிர்த்துள்ளனர். விரிவான விவாதங்கள் தொலைக்காட்சி ஊடகங்களின் வாயிலாக முன்னெடுக்கப்பட்டது. 

 மனைவி தன் கணவனிடம் வீட்டுப் பராமரிப்புச் செலவிற்கான ஊதியத்தைக் கோருவதற்குப் பதில் அரசானது பெண்களை உண்மையிலேயே மேம்படுத்தும் வகையில் வீட்டிற்கு வெளியே வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்திட வேண்டும் என்று மாயா ஜான் எழுதியுள்ளார். மேலும் அவர் சொல்வது,உண்மையில் இந்த வரைவில் உள்ள பிரச்சினை,  இதுதேவையற்றதோ  இழிவுபடுத்தும்   வகையில் இருப்பதோ அல்ல; வீட்டுப்பராமரிப்பு  பணி  மற்றும்  பெண்களின்  உழைப்பைச்   சுற்றிய  பொருளாதாரத்தைப்  பற்றி  தவறாகப்  புரிந்துகொண்டு  அறிவிக்கப்பட்டதே  இதிலுள்ளப்  பிரச்சினை.  பெண் தன் குடும்பத்தில் அவளது நிலையை மேம்படுத்துவதிலும் நாட்டின் பொருளாதாரத்தில் அவளது பங்களிப்பை அங்கீகரிப்பதிலும் இந்திய அரசு தீவிரமாக உள்ளதா என்பதும் இப்பொழுது கேள்விக்குரியதாவது தெளிவு என்கிறார். (மாயா ஜான் தில்லியில் வசிக்கும் சமூக ஆர்வலர், ஆய்வாளர்.)

 லிட்டில் மேகசின் நிறுவனர், ஆசிரியர் அந்தரா தேவ் சென்னும் இப்பரிந்துரை மீது தனது விமர்சனத்தை  பதிவு செய்துள்ளார்.  பெண்களுக்கு அதிகாரத்தில் பங்கு, முடிவெடுக்கும் உரிமை, கணவனின் சொத்துக்களில் சம பங்கு, கூட்டு வங்கிக் கணக்கு, பெண்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றை அக்கட்டுரையில் அவர் பரிந்துரைக்கிறார்.

 இப்படி ஒவ்வொரு பெண்ணியலாளர்களும்  இந்த சம்பளப் பரிந்துரை  மீது கருத்து தெரிவித்துள்ளனர். இவர்களில் ரங்கநாயகம்மா மார்க்சிய கோட்பாட்டுப் பார்வையோடு தனது விமர்சனத்தை  வைத்துள்ளார்.
  
ரங்கநாயகம்மா:

ஆந்திர பிரேதசம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பொம்மிடி எனும் கிராமத்தில் உள்ள தாடெபள்ளிகுடம் எனும் சிற்றூரில் 1939 இல் பிறந்தவர்.  அடிப்படையில் அவர் ஒரு நாவலாசிரியர், சிறு கதை எழுத்தாளர். இதுவரை 15 நாவல்கள், 70 சிறு கதைகள் மற்றும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். அவருடைய எழுத்துக்கள் பாலின சமத்துவத்தை வலியுறுத்துவதாக அமைந்திருக்கின்றன.

 அவரது வாழ்க்கைத் துணைவர்  பெயர் பாபுஜி. இருவரும் சேர்ந்து தங்களது சொந்த விருப்பத்தின்  பேரில் மார்க்சியம் கற்றனர். அதன் பிறகு பல மார்க்சியக்  கட்டுரைகள், நூல்களை எழுதியுள்ளார். மார்க்சின் மூலதனத்திற்கு  அறிமுகம் (An Introduction to Marxs Capital) எனும்  நூல் குறிப்பிடத்தக்கது. இது மூன்று பாகங்களாக வெளிவந்துள்ளது. அது தவிர சமமற்ற நிலையிலிருந்து சமமற்ற நிலைக்கு எனும் தலைப்பில் பூர்ஷுவா பெண்ணியம் குறித்து விமர்சனக் கட்டுரைகளை எழுதியுள்ளார். மார்க்சியத்திற்கு எதிரான ஹைதராபாத் பெண்ணிய வட்டம் வெளியிட்டிருந்த அலெக்சாண்ட்ரா கொலாண்டையின் ருசியக் கதையான மூன்று தலைமுறையின் காதல்கள் எனும் கதையினை எடுத்துக் கொண்டு அவ்விமர்சனக் கட்டுரைகளை எழுதினார் ரங்கநாயகம்மா. மேலும், லூயி மார்கன், ஃப்ரெட்ரிக் எங்கல்ஸ் மற்றும் லெனின் ஆகியோரின் கோட்பாட்டு உருவாக்கங்களை முன்வைத்து பூர்ஷுவா பெண்ணியம் என்பது பெண்களை ஒருவிதமான   சமமற்ற நிலையிலிருந்து மற்றொரு சமமற்ற நிலைக்கு கொண்டு செல்கிறது என்று நிறுவினார்.  மார்க்சியம் என்பது பாலின சமத்துவத்திற்கு எவ்வகையில் சரியான தீர்வை வழங்குகிறது என்பதை ஜானகி விமுக்தி (ஜானகியின் விடுதலை) எனும் தலைப்பில் மூன்று பகுதிகள் கொண்ட நாவலின் வாயிலாக எடுத்துரைக்கிறார்.

 மார்க்சிய நூல்கள் பெருவாரியாக  சென்று சேரவேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக்  கொண்டு அவர்கள் ஸ்வீட் ஹோம் (sweet home) என்கிற பதிப்பகத்தையும் நிறுவி நடத்தி வருகின்றனர். மிகக் குறைந்த விலையில் மார்க்சிய நூல்களை வெளியிட்டு வருகின்றனர். ரங்கநாயக்கமா தெலுங்கில் எழுதி, அதை பாபுஜி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறார்.

(உயிர் எழுத்து இதழில் இம்மாதம் வெளிவந்துள்ள கட்டுரை)



No comments:

Post a Comment