Aug 29, 2012

திரு. சகாயத்தின் அறிக்கை மீது ராஜப்ரியாவின் கேள்விகள்



மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் சகாயத்தின் அறிக்கையை வெளியிட்ட ஊடகங்கள் ராஜப்ரியாவின் கேள்விகளை பிரசுரிக்கவில்லை. ஒன்றிரண்டு ஊடகங்கள் மட்டுமே அதை பிரசுரித்தன, அதிலும் வைக்கப்பட்டுள்ள பின்னூட்டங்கள் ஆணாதிக்கப் பார்வையை மட்டுமே வெளிப்படுத்துகிறது.

பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அதிலும் பல தடைகளை எதிர்கொள்ள நேரிட்டதாக ப்ரியா தெரிவிக்கிறார்.  அவருடன் பேசியபோது மிகவும் வருத்தமாக இருந்தது.

முன்னர் ஒரு வெளியீட்டில் இந்த பிள்ளைகளே கூட திரு. அஸ்ரா கர்ககும், திரு. சகாயமும் தங்கள் அபிமானத்திற்குரியவர்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். இப்போது அவர்களே வருத்தப்படுகின்றார்.

உஷாராணியை, அவர் குடும்பத்தாரை, அப்பகுதி மக்களை விசாரிக்காமல் திரு. சகாயம் அவர்கள் அறிக்கை அளித்திருக்கிறார். அறிக்கையில் குடிக்கவில்லை என்று குறிப்பிட்டு, பின்னர் மாற்றியதாக ப்ரியா கூறுவது கவனிக்கத்தக்கது.

எது பொய், எது உண்மை என்பதை நாம் அறியோம், ஆனால் ராஜப்ரியா பத்திரிகையாளர்கள் சந்திப்பு அழைப்பு விடுக்கிறார். பெண்கள் அமைப்பு அதற்கு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
________________________________
என் பெயர் ராஜப்ரியா.. இருபத்தி இரண்டு வயதுப் பெண் நான். மதுரையை சேர்ந்தவள். மனதில் ஏராளமான வலிகளோடு உங்களோடு சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.
என் தாயார் பெயர் உஷாராணி கடந்த ஞாயிற்றுக்கிழமை 19-08-12ம் தேதி செய்தித் தாட்களில் முன்னாள் மதுரை கலெக்டர் சகாயம் வெளியிட்ட அறிக்கையை வாசித்திருந்தீர்களானால் என் அம்மாவைப் பற்றித் தெரிந்திருக்கும். இந்த சமூகத்தில் ஆண்களுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கும் வீட்டு விலங்காய் வாழ்ந்த பிரதிநிதி என் அம்மா
அப்பா குடித்து விட்டு அம்மாவை அடிப்பதையும் சித்திரவதை செய்வதையும் பார்த்து சிறுவயதிலிருந்தே மனக்கலக்கத்தோடு வளர்ந்தவர்கள் நாங்கள். அப்பா அம்மாவின் காலை உடைத்துக் கூட இருக்கிறார். இந்த சமபவம் குறித்த புகாரில் வழக்கொன்று நீதிமனறத்தில் நிலுவையில் உள்ளது. இத்தனை துயரத்திலும் அம்மாவின் கண்ணீரிலும் நாங்கள் வளர்ந்தோம்.

கடந்த பிப்ரவரி மாதம் என் அப்பா குடிபோதையில் என் தங்கையிடம் தவறாக நடந்து கொண்டார்.  அவளை அவரிடமிருந்து காப்பாற்ற அம்மா அவரை அடித்த போது அவர் உயிரிழந்தார். இதை விசாரித்த அப்போதைய காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த எஸ்.பி. அஸ்ரா கார்க் அம்மாவை ஐ.பி.சி. செக்‌ஷன் 100ன் (“the right of private defence of the body extends to the voluntary causing of death or any other harm to the assailant if the offence that occasions the exercise of the right is an assault with the intention of committing rape.”  ) கீழ் விடுவித்தார்.

என் அப்பாவின் அப்பா , எங்கள் தாத்தா சமயமுத்து எங்கள் அம்மா  , அப்பாவைக் கொலை செய்தார் என்று தொடர்ந்த வழக்கு மதுரை உயர்நீதிம்னறக்கிலியில் நிலுவையில் இருக்கிறது. அதன் தீர்ப்பு வெளியாகும்  முன்னமே கலெக்டர் சகாயம் இந்த வழக்கில் இத்தனை ஆர்வம் காட்டுவது ஏன் என்பது சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது பெண் குழந்தைகளாய் நாங்கள் கடந்த ஐந்தாறு மாதங்களாக அனுபவித்த வேதனைகளை நினைத்தும் பார்க்காமல் எங்கள் அம்மாவைக் கொச்சைப்படுத்தும் விதமாய் அவர் அறிக்கையை  கொடுத்துள்ளார்.இதன் பின்னணியில் எனக்குள் ஏற்படும் சந்தேகங்களையும் கேள்விகளையும் நாட்டின்   நான்காம் தூண்களான உங்கள் முன் வைக்கிறேன்.:

சமயமுத்து தாத்தா கொடுத்த மனு மேல் நடவடிக்கை எடுக்கும் போதுகலெக்டர் சகாயம் என் அம்மாவையோ என் தாத்தாவையோ மாமாவையோ எங்களையோ விசாரிக்கவே இல்லை என்பதையும் அவர் சம்பவம் நடந்த இடத்துக்கு வரவேயில்லை என்பதையும் ஆணித்தரமாய் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

இந்த வழக்கு சமபந்தமான விஷயங்களை ஊமச்சிக்குளம் காவல் நிலையத்தில் கலெக்டர் சகாயம் கேட்டதாகவும் அது தனக்குக் கிடைக்கவில்லை என்றும் அறிக்கையில் சொல்லியிருக்கிறார். இந்த வழக்கு பற்றின விசாரணை விவரங்களை ஏன் கலெக்டர் சகாயம் அதை விசாரித்த எஸ். பி. ஆஸ்ரா கர்க்கிடம் கேட்கவில்லை என்கிற முக்கியமான கேள்வி எனக்கு எழுகிறது. ஏன் நேரிடையாக இன்ஸ்பெக்டரிடம் ஒரு கலெக்டர் விவரங்களைக் கேட்க வேண்டும்?

அவர் எங்களை தான் விசாரிக்கவில்லை. விசாரணை விவரங்களை எஸ்.பியிடமும் கேட்கவில்லை. ஆனால் அப்பா பற்றியுமா முழுசாக விசாரிக்கவில்லை. கலெக்டர் சகாயத்தின் அறிக்கையில் மதுரை காவல் நிலையங்களில் அம்மா அப்பா மீது கொடுத்த புகார்களைப் பற்றி எந்த குறிப்புகளுமே  இல்லை.

அப்பா அம்மாவின் காலை உடைத்த வழக்கு இன்னும் நீதிமன்ற நிலுவையிலேயே உள்ளது. அதில் சமயமுத்து தாத்தாவும் ஒரு குற்றவாளியாக விசாரிக்கப்படுவது  கலெக்டருக்கு தெரியுமா?

அதே போல் கலெக்டர் அறிக்கை அளிப்பதற்கு முன் இந்த வழக்கு சம்பந்தமாக எத்தனை சாட்சிகளை விசாரித்தார் என்பதையும் அறிக்கையில் அவர் தெரிவித்திருக்க வேண்டும்.
அம்மாவை எஸ்.பி. விடுதலை செய்த போது அதை பல தரப்பு பெரியவர்கள் பாராட்டினர். எஸ்.பியைப் பலர் பாராட்டுவது  பிடிக்காமல் தான் கலெக்டர் சகாயம் இப்படி அறிக்கை விடுகிறார் என்று எனது உள்ளுணர்வு சொல்கிறது. எல்லாரும் ….சில பத்திரிகைகளின்  மூலம் கலெக்டர் சகாயத்துக்கு எஸ்.பி. ஆஸ்ரா கர்க்கைப் பிடிக்காது என்று அறிந்து கொண்டேன்.
எஸ்.பிக்கு எங்கள் அம்மாவை விடுதலை செய்யும் அதிகாரம் இல்லை என்று அறிக்கையில் சொல்கிறார். தாத்தா தொடுத்த வழக்கு நிலுவையில் இருக்கும் போது இதை எப்படி கலெக்டர் சொல்ல முடியும்? அந்த அதிகாரத்தை அவருக்குக் கொடுத்தது யார்? எஸ்.பியின் நடவடிக்கை சரியா தவறா என்று எஸ்.பியின் உயர் காவல்துறை அதிகாரிகளும் நீதிமன்றமும் தான் சொல்ல முடியும்.

இப்படி சரியான முறையில் விசாரிக்காமல் அறிக்கை மட்டும் கொடுத்ததை முன்வைத்துப் பார்க்கும் போது எஸ்.பி. மீதான கலெக்டரின் தனிப்பட்ட துவேஷத்தை தீர்த்துக் கொள்ளவே இப்படி செய்துள்ளாரோ என்று தோன்றுகிறது.  தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் இந்த அறிக்கையை வாங்க எங்கள் தாத்தா சமயமுத்துவை சொன்னது கூட கலெக்டர் சகாயமாக  இருக்கலாமோ என்று சந்தேகமும் வருகிறது.

இதே சமயமுத்து தாத்தா என் அம்மாவின் நகைகளையும் சொத்துக்களையும் அபகரித்து வைத்துள்ளார். அதையாவது கலெக்டர் விசாரித்தாரா? நியாயமான முறையில் அறிக்கை கொடுத்திருந்தாரானால் அதைப் பற்றியுமல்லவா எழுதியிருக்க வேண்டும்?
10. அது போகவும் இந்த வழக்கை விசாரணை செய்ய கலெக்டருக்கு என்ன அதிகாரம் உள்ளது என்பதும் எனக்கு புரியவில்லை.

11. கலெக்டர் சகாயம் தனது அறிக்கையில் என் தங்கை கோகுலப்ரியா அப்பா இறந்த அன்று மட்டும் கல்லூரிக்குப் போகவில்லை . அது ஏன் என்றெல்லாம் மிகப்பெரிய விசாரணை அதிகாரி போல் கேள்வி கேட்டிருக்கிறார். உடல்நலக் குறைவு எல்லா மனிதர்களுக்கும் ஏற்படுவது தான். அப்பா எப்படி இறந்தார் என்ற விசாரணையை சம்பவம் நடந்த இடத்துக்கு வந்தோ சம்பந்தப்பட்ட எங்களிடமோ விசாரிக்காமல் இப்படி

தட்டையாய் கேள்வி கேட்கும் இவர் நல்லவேளை காவல்துறை அதிகாரியாகவில்லை. தமிழ்நாடு சகாயம் என்ற காவல்துறை அதிகாரியிடமிருந்து தப்பித்து விட்டது

12.            அது மட்டுமல்ல. யூகத்தின் அடிப்படையில் என் அப்பா குடிக்கவே இல்லை என்று முதலில் அறிக்கை கொடுத்து விட்டு பிறகு போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்டில் “ethyl alchol” அருந்தியதாய்த் தெரிந்ததும் அறிக்கையையே மாற்றி “correction report ” சமர்பித்தது எங்களுக்குத் தெரியாது என்று நினைக்கிறார் போலும். இப்படி எந்த அறிக்கையை முன்வைத்து விசாரித்து முடிவெடுத்து அறிக்கை வெளியிட வேண்டும் என்பது கூட தெரியாத இவர் எப்படி ஒரு மாவட்ட கலெக்டராக செயல்பட முடியும் என்பதே வேடிக்கையாக உள்ளது.

13. எஸ்.பி. விளம்பரத்துக்காக அம்மாவை விடுவித்தார் என்று அறிக்கையில் எழுதியிருக்கிறாரே. அப்படி விளம்பரத்துக்காக வேறு யாரையெல்லாம் எஸ்.பி.விடுவித்திருக்கிறார் என்று கலெக்டர் சொல்லியே ஆக வேண்டும். எனது அம்மா மீது குற்றமில்லை என்று நன்றாக விசாரித்த பிறகே அம்மாவை எஸ்.பி. விடுவித்தார். தேவையில்லாமல் எஸ்.பி மீதான விரோதத்தைத் தீர்த்துக் கொள்வதற்காக இப்படி அவதூறாக செயல்படும் கலெக்டர் இதன் மூலம் தேடிக் கொள்ளும் விளம்பரம் மிக அருவெறுப்பானது. அதை நேர்மையோடு தகர்த்தெறியும் கடமை எனக்கு உள்ளது.

14. மெல்ல மெல்ல இப்போது தான் என் அம்மா கவுன்சலிங் மூலம் அவருக்கு ஏற்பட்டிருந்த மன உளைச்சல்களை விட்டு மீளும் முயற்சியில் உள்ளார். காலம்காலமாய் என் அம்மா அனுபவித்த சித்ரவதைகள் ஏராளம். செய்தித் தாட்களில் கலெக்டரின் ஆதாரமற்ற அறிக்கை, அம்மாவின் புகைப்படத்தோடு வெளியாகி இருப்பதைப் பார்ப்பதும அவரின் குழந்தைகளான எங்களுக்கு மனரீதியாக ஒரு சித்திரவதை தான். ஆதாரமே இல்லாமல், முறையான விசாரணையே இல்லாமல் இப்படி அறிக்கை அளிக்கும் கலெக்டர் நியாயமானவரென்று எப்படி சொல்ல முடியும்?

15. என் அம்மா மேலுள்ள வழக்கை நாங்கள் நேர்மையாக நீதிமன்றத்தில் சந்திப்போம். எங்களுக்கு எஸ்.பி உறவுமில்லை. கலெக்டர் எதிரியுமில்லை. தனிப்பட்ட விரோதங்களை முன் வைத்து ஆதாரமற்ற கலெக்டர் சகாயத்தின் அறிக்கைக்கு பலியானது வாழ போராடிக் கொண்டிருக்கும் எங்கள் குடும்பத்தின் நிம்மதியே.

ஒரு பெண்ணை பலபேருடன் தொடர்பு உள்ளவள் என்று ஆதாரமின்றி பொத்தாம்பொதுவாக சொல்லி விட்டு செல்வது அவள் குடும்பத்துக்கு எத்தனை பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை கலெக்டரின் நேர்மையும் நியாயமும் ஏன் அவருக்கு உணர்த்தவில்லை
காலம் பூராவும் அம்மா பட்ட வேதனையைக் கண்ணால் பார்த்த சாட்சியாய் ,  என் மனதில் இருக்கும் வடுக்களை மரணம் கூட அழிக்காது.. என்ன நடந்ததென சரியாக விசாரிக்காமல் என் அம்மாவுக்கு வேறு தொடர்புகள் உண்டென அறிக்கையில் ஆதாரமில்லாமல் சொல்வது அவதூறானது.எங்கள் அப்பாவால் என் அம்மாவுக்கும் எங்களுக்கும் வேதனையோடும் துயரத்தோடும் தான் தொடர்பு இருந்தது. இப்போது கலெக்டரின் அறிக்கையால் அவமானத்தோடும் வேதனையோடும் எங்களுக்குத் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது.

அப்பாவே ஒரு மகளை பாலியியல் வன்முறைக்கு ஆளாக்குவதன் வலியை கலெக்டர் நினைத்தே பார்க்கவில்லை. அந்த வலி ஒரு வழக்கின் மூலம் பகிரங்கப்படுத்தப்படும் போது ஏற்படும் அவமானத்தையும் அவர் நினைத்தே பார்க்கவில்லை.

எங்கள் அப்பாவின் குணம் பற்றி இந்த ஒரு வழக்கை மட்டும் வைத்து தீர்மானிக்க வேண்டாம். அவர் மீதிருக்கும் இதற்கு முன்னால் இருக்கும் வழக்குகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எந்த மனைவியும் எந்த குழந்தையும் தன் கணவன் மோசமானவன் , தன் தந்தை ஒழுக்கமற்றவன் என்று சுலபமாய் சொல்லி விட மாட்டார்கள்.

எனக்கு அப்பா என்றாலே பயம் தான் கண்முன் தோன்றும். நான் அறிந்ததெல்லாம் எப்போதும் குடித்து அம்மாவிடம் சண்டைப் போட்டு அடிக்கும் ஒரு அப்பா தான். பெண் குழந்தைகளிடம் அன்பாக இருக்கும் அப்பாக்களை நான் இன்றும் ஏக்கத்தோடு தான் பார்க்கிறேன்  கலெக்டர் சகாயமும் ஒரு பெண்குழந்தைக்கு அப்பா என்பதால் இதை நன்றாக புரிந்து கொள்ள முடியுமென நம்புகிறேன்.

அப்பா சரியில்லாத குடும்பத்துப் பெண்கள் என் வேதனையை, ஏக்கத்தை, அவமானத்தை புரிந்து கொள்வார்கள். கணவனால் சித்திரவதைக்கு ஆளாகி கண் முன் சொந்த மகளிடமே கணவன் தவறாக நடந்து கொள்வதைப் பார்த்த அம்மாக்கள் என் அம்மாவின் வலியைப் புரிந்து கொள்வார்கள்.

தமிழக முதலமைச்சர் ஒரு பெண்ணாய் , ஒரு மகளாய் என் வேதனையைப் புரிந்து கொள்ளவார் ஆனால் மனசாட்சியே இல்லாமல் ஆதாரமற்ற அறிக்கையால் மீண்டும் எங்களை மன உளைச்சலுக்கும் சித்திரவதைக்கும் அளவில்லாத வேதனைக்கும் ஆளாக்கிய கலெக்டர் சகாயம் எப்படி தன்னை நியாயமுள்ளவர், நேர்மையானவர் என்று தமிழக மக்களிடம் சொல்லிக் கொள்ள முடியும்?

2 comments:

  1. இப்படி ஒரு சட்டம் கொண்டு வரலாம். விபத்துக்களின் அவசர உதவிக்கு நூற்றியெட்டு போன்ற தொடர்பு எண்கள் இருபதைப் போன்று, ஒரு பெண் வன்கொடுமைக்கு உள்ளாகும் போது உதவிக்கு அழைக்க, ஒரு தொடர்பு எண் இருந்தால் நல்லது, அல்லது ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு " மினி துப்பாக்கி " கொடுத்து வன்கொடுமை செய்பவர்களைக் கொல்லலாம் என்று ஒரு சட்டம் கூடக் கொண்டு வரலாம். அந்த அளவுக்கு சீர்கெட்டு இருக்கிறது நம் சமூகம் !

    ராஜப்ரியாவின் உணர்வுகளை பொறி பறக்கும் தங்கள் எழுத்துக்களில் பார்க்கும்போது ஆதங்கமும், ஆவேசமும் ஒருசேர ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை !

    ReplyDelete
  2. நன்றி.
    https://masessaynotosexism.wordpress.com/2012/09/05/update-on-usha-ranis-case/

    ReplyDelete