Jul 4, 2012

எழுதும் இறகில் ஸ்கலித மை





மனிதர்கள் அன்பு மிக்கவர்களாக
இருக்கிறார்கள்
சொற்கள் அன்பை மென்று செறிக்கையில்
காகிதப் புலிகளின் உடல்களிலிருந்து
அர்த்தங்களை பிரித்தெடுக்கிறது

எஞ்சி நிற்பது
வெற்று 
நா

கேள்விகளின் நிறத்தை பகிரங்கமாக உடுத்தி
பால் அடையாளத்தை
பொருத்துகிறது
வளைவுகளற்ற
மென் நா

இருப்பு
எப்போதும் பற்றாக்குறையை
தனக்கேயுரிய புன்னகையுடன் வெல்கிறது

பால் துருத்தும் உறுப்புகள்
தஞ்சமடைகிறது
உடல்
சுதந்திரம்  

அது
தன்னை நிச்சயமாக
அறிவித்துக் கொள்ளும் வேளையில்

பொம்மையை அணைத்திருக்கும்
மார்புகளிலிருந்து காம்புகளை
அறுத்தெரிகிறான்
ஒருவன்
நிச்சயமாக
‘ன்’
தான்

விரல்களை சூப்பிக்கொண்டிருக்கும்
மயிரற்ற யோனியில்
துருப்பிடித்த
நாட்ப்பட்ட கருமையேறிய
ப்ளேடை செலுத்துகிறான்
உடல் மொழியின் பேரரசன்

புத்தரின் மூடிய இமைகளிலிருந்து
புன்னகையுடன்
குமிழியிட்டுச் சிதறும்
எண்ணற்ற
எண்ணற்ற துவக்குகள்
காவலுடன்
புணரப்படுகின்றன

எம்  உடல்கள்

உடல்
சுதந்திரம்
ஆம்
அதுவே

துவக்குகளை
அடைக்கும் மொழியென்றாகிய கருந்தோட்டாக்கள்
அல்லது
தவிர்க்கவியலாத விடுதலை
கேள்விக்குறிகளை நிமிர்த்தும்
மொழி
கணவன்மார்களிடமிருந்து
நாற்காலியைப் பறிக்கப்போகும்
மொழி
யோனிகளின் சிதைவுகளை தடுக்கப்போகும்
மொழி

தலைவர்களே
உங்கள் அடிமைகளை உங்களுக்கு இணையாகக் கருதி
நேர்மையோடு நடத்துங்கள்.
உங்களுக்கும் விண்ணகத்தில்
ஆண்டவர் ஒருவர் உண்டு
என்பதை நினைவிற்கொள்ளுங்கள் *

ஆண்டவர் அருளிய மொழியில்
குறிகள்
யோனிகளுக்கு கற்றுத் தருகிறது
மொழியை….

ஒரு உடல் கால்களில் தோன்றியது
ஒரு உடல் அதற்கும் அப்பால்
ஒரு உடல் விலா எலும்பிலிருந்து

ஆம்

அது
எம்
தந்தையர்களால் எழுதபட்ட
அவர்களுக்கான
உடல் மொழி

*கொலோசையர் 4:1

No comments:

Post a Comment