May 6, 2017

மீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து -

மீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து -
பலிக்கலாம் அல்லது பலிக்காமலும் போகலாம் வகை சீர்திருத்தவாதிகள் (hit-or-miss reformers)


“ மார்க்சின் இயங்கியல் பொருள்முதல்வாதத்துடன், அம்பேத்கரின் சாதி ஒழிப்பு இயக்கத்தை இணைப்பதென்பது இந்தியப் புரட்சிக்கு ஒரு பரந்த பாதையை இடும் என்று கே.ஜி. சத்தியமூர்த்தி கருதுகிறார். ரங்கநாயகம்மாவுக்குப் பதிலாக அவர் எழுதிய ‘அம்பேத்கர் என்னும் சூரியன்’ எனும் தத்துவார்த்த ஆய்வறிக்கையில், இந்த அம்சத்தை அவர் விரிவாக விளக்கியுள்ளார்.” (ஆந்திர ஜோதி, ஏப்ரல் 30).

கடந்தகாலத்திலும் சரி, இன்றைக்கும் சரி ‘அம்பேத்கர் என்னும் சூரியன்’ நூலை எனது நூலுக்கான பதிலாக நான் கருதவே இல்லை. ஆனால், அந்த நூல் மார்க்ஸையும், அம்பேத்கரையும் கலப்பது எனும் மாபெரும் ‘தத்துவார்த்த ஆய்வாக’ முன்வைக்கப்படுவதால், அதில் உள்ள சில பகுதிகளுக்கு மட்டும் பதிலளிக்க விரும்புகிறேன்.

சத்தியமூர்த்தி (மக்கள் யுத்தக் கட்சி, சிபிஐ-எம்எல்லின் ஒருமுறை செயலாளர், பின்னர் அவர் பிஎஸ்பியில் சேர்ந்தார், பின்னர் பஹுஜன் குடியரசு கட்சியில் சேர்ந்தார், அதன் பின்னர் பல அமைப்புகளில் இருந்தார். சமீபத்தில் காலமானார்). தங்களுக்கு விருப்பமான வகையில் மண்ணுக்கேற்ற மார்க்சியம் அல்லது தேசிய மார்க்சியம் என்றெல்லாம் வளைக்க முயற்சிக்கும் ஏனோதானோவென்று அறிவொளி பெற்ற சீர்திருத்தவாதிகளுள் ஒருவர்.

தொழிலாளர்வர்க்கம் வர்க்கப் போராட்டம் தொடுப்பதன் மூலம் சுரண்டல்வாத வர்க்க உறவுகளையும், சுரண்டல்வாத உழைப்புப் பிரிவினையையும் ஒழிக்க வேண்டும் என்று மார்க்ஸின் மார்க்சியமானது வலியுறுத்துகிறது. இந்தக் கோட்பாட்டின்படி, வர்க்க முரண்பாடு நிலவும் எந்த ஒரு நாட்டிலும் வர்க்கப் போராட்டமே தொழிலாளர் வர்க்கத்தின் பிரதானக் கொள்கையாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட நாட்டின் குறிப்பிட்ட பிரச்சினையானது, அந்தப் பிரதானக் கொள்கையால் ஆளப்பட்டு, அடிப்படை நிலைமைகளை மாற்றியமைப்பதன் மூலம் மட்டுமே தீர்க்க முடியும்.

பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் விளைவால், சுரண்டும் வர்க்கமும் உற்பத்தியாளர்களாகி, தம் உழைப்பில் வாழத் தொடங்கும். எஜமானர்-தொழிலாளர் உறவுகள் மறையும். இந்த உண்மையை வலியுறுத்தும் மார்க்ஸின் கோட்பாட்டை சுரண்டும் வர்க்கம் நிராகரிப்பதில் வியப்பேதுமில்லை. ஆனால், உழைப்புச் சுரண்டலை ஒழிக்கச் சொல்லும் அக்கோட்பாட்டை இந்தியாவின் பெரும்பான்மை தொழிலாளர் வர்க்கங்களான பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கூட ஏற்காதது வியக்கத்தக்கதே. ஆனால் அவர்களின் தலைவர்கள் இதைப் பற்றி ஏதும் கற்றுக்கொடுக்காததே இந்த நிராகரிப்புக்குக் காரணம். பூர்ஷுவாமயமாதலே அவர்களின் இலக்கு! சுரண்டல் முறையிலேயே முன்னேறுவது. இது காரணமில்லையென்றால், மார்க்சியத்தை இத்தனை தூரம் அவர்கள் எதிர்க்க வேண்டிய அவசியமே இல்லை.

இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் செயல்பாடுகள் பிடிக்கவில்லையெனில் அத்தகைய தலைவர்கள் தாமாக மார்க்சியத்தைப் படித்து, தங்களுக்கென ஒரு கம்யூனிஸ்ட் அமைப்பை உருவாக்கலாம், தங்களின் மக்களுக்கு அதைக் கற்றுக் கொடுத்து, தங்களின் முன் இருக்கும் புரட்சிகர இலக்கைப் புரிய வைக்கலாம். மார்க்சியம் ஒன்றும் ஏற்கனவே இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சொத்தல்ல.

சத்தியமூர்த்தி போன்ற ஒரு தலைவரை நாம் எடுத்துக் கொண்டால், அவருடையது ஒரு கோட்பாடல்ல, முரண்பாடான இரண்டு கோட்பாடுகளின் கலவையாகும். ஒருபுறம், அவர் அம்பேத்கரின் மார்க்சிய எதிர்ப்பை தழுவிக் கொள்கிறார்  அதேவேளை பொதுமக்களிடம் மார்க்சியத்திற்கு இருக்கும் ‘மவுசை’ அவரால் தட்டிக் கழிக்கவும் முடியவில்லை. இத்தகைய தலைவர்கள் மார்க்சியத்தை முழுமையாக கைவிட மாட்டார்கள். அதனால் அவர்கள் சில புத்திசாலித்தனமான தீர்வுகளுக்கு வருகின்றனர்.

இந்த நாட்டில் கிடைக்கும் உடனடித் தீர்வு என்னவெனில், அம்பேத்கரையும், மார்க்ஸையும் இணைப்பது! அல்லது தேவைப்பட்டால் இந்தக் கலவையில் காந்தியையும் கலப்பது!

பெயர்கள் தானே எத்தனை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். சரி, கோட்பாட்டளவில் அந்த இரண்டையும் கலக்க முடியுமா? இணைக்க முடியுமா?

மார்க்சின் கோட்பாடு என்னது? உழைப்புச் சுரண்டல் உறவுகளை ஒழிப்பது. வர்க்கப் போராட்டம் வன்முறையல்ல. உழைப்புச் சுரண்டலைத் தொடர்வதற்காக எஜமானர்கள் தொடுக்கும் வன்முறையை நிறுத்துவதற்காகத் தேவைப்படும் வன்முறை அது. தொழிலாளர் வர்க்கத்திற்கான தற்காப்பு தவிற வேறெதுவுமில்லை. பழைய முரண்பாடான நிலைமைகளை மாற்றியமைத்தாலன்றி  வர்க்க உறவுகளிலிருந்து எழும் குறிப்பிட்ட எந்தப் பிரச்சினையையும் தனியாகத் தீர்க்க முடியாது. மார்க்சிடம் மதமில்லை. அவருடையது பொருள்முதல்வாதமாகும்.

அம்பேத்கருடையக் கோட்பாடு என்னது? வர்க்கப் போராட்டமே தேவையில்லை! சீர்திருத்தம் இருக்கிறது. சாதி கூடாது! மதம் அவசியம். அதை நாம் சீர்திருத்துவோம்! ஆன்மீகத்தைக் கைவிடக் கூடாது. சாதியை ஒழித்த பின்னர் நாம் வர்க்கம் பற்றி கவலைப்படுவோம்!

காந்தியின் கோட்பாடு என்னது? தொழிலதிபர்களைத் தொடாதீர்கள்! அவர்கள்தான் அனைத்து சொத்துகளின் தர்மகர்த்தாக்கள்! இந்த தர்மகர்த்தா முறை மூலம் உழைப்பாளர்களை பெருந்தன்மையோடு நடத்தினால் போதும். அப்படியென்றால் சாதி? நாம் தீண்டாமையைக் கைவிட வேண்டும். சாதி எப்போதும்போல் இருக்கட்டும். சலவைத் தொழிலாளி எப்போதும் சலவையே செய்யட்டும், கழிப்பறை தூய்மை செய்பவர் எப்போதும் கழிப்பறையையே தூய்மை செய்யட்டும், அதேபோல் பிராமணர் அவருடைய வேலையை செய்யட்டும். இது எவ்வளவு நல்லது! இந்துமதத்தில் என்ன தவறு இருக்கிறது, அது அற்புதமான மதம்! வாருங்கள் நாம் ராமரையும், அல்லாவையும் ஒன்றாகப் புகழ்ந்து பாடுவோம். போராட்டமா? கூடாது! கூடவே கூடாது! அது வன்முறையானது. இருப்பினும், அரசாங்கத்திற்கு காவல்காரர்களும், இராணுவ வீரர்களும் தேவை. அது வன்முறையாகாது.

அப்படியென்றால் வர்க்கப் போராட்டம்? அது கொடுமையான வன்முறை.

இப்போது, நாம் இம்மூன்று கோட்பாடுகளையும் அல்லது இரண்டையாவது இணைக்க வேண்டும். சரி இணைப்போம்! ஒன்றுகலக்குமா?

அம்பேத்கரின் கோட்பாடு: காந்திக்கு எதிரானது. மார்க்ஸுக்கு எதிரானது.
காந்தியின் கோட்பாடு: அம்பேத்கருக்கு எதிரானது. மார்க்ஸுக்கு எதிரானது.
மார்க்சின் கோட்பாடு: இரண்டிற்கும் எதிரானது.
                                வர்க்கக் கலப்பு மற்றும் சீர்திருத்தத்தவாதத்திற்கு எதிரானது.

புத்தரை எடுத்துக்கொண்டால், அவருடைய அஷ்டாங்க மார்க்கம், ஒன்றுக்கும் உதவாது.

இவற்றில் எந்த இரண்டையும் ஒன்றாகக் கலக்க முடியாது என்பதை இக்கோட்பாடுகளுக்கிடையில் உள்ள முரண்பாடுகளை அறிந்தவர்களுக்குத் தெரியும். அதை அறிந்தவர்கள் என்ன சொல்ல வேண்டும்? காந்தியின் கோட்பாடு பயனற்றது என்று தூக்கி எறிய வேண்டியும்.

அம்பேத்கரின் கோட்பாட்டிலிருந்து ‘சாதி ஒழிப்பு’ எனும் அம்சத்தை எடுத்துக்கொள்ள வேண்டும், ஆனால் சாதியை ஒழிப்பதற்கு, உழைப்புசார் உறவுகளை தலைகீழாக மாற்றியமைக்கும் இலக்கைக் கொண்ட வர்க்கப் போராட்டத்தால் மட்டுமே முடியும். கீழ்நிலை சாதிகளின் பொருளாதார நிலைமைகளை மாற்றியமைக்காமல் சாதி ஒழிப்பு சாத்தியமில்லை.

எல்லாவற்றிலும் ஒரு தர்க்கம் இருக்கும். அந்தந்த தர்க்கத்தின்படி, ஒற்றுமையும், முரண்பாடும் உருவாகின்றன. ‘குறிப்பிட்ட பிரச்சினைகள் பாட்டாளி வர்க்கப் போராட்டத்தினால் மட்டுமே தீர்க்க முடியும்’ என்று சொல்லக்கூடிய ஒரு கொள்கையை, ‘சாதியை ஒழித்த பின்பு மட்டுமே வர்க்கப் பிரச்சினையைக் கையில் எடுக்க வேண்டும்’ என்று சொல்லும் மற்றொரு கொள்கையை எப்படி இணைக்க முடியும். சத்தியமூர்த்தி போன்ற அறிவுஜீவிகளுக்கு எதுவும் சாத்தியம். தர்க்க நியாயங்கள் எதுவும் தேவையில்லை. அவரைப் பொறுத்தவரை, அம்பேத்கரையும், மார்க்ஸையும் இணைக்க முடியும். இரண்டையும் ஒரு கோட்பாடாக்க முடியும். பிறகு, மார்க்சியத்தை எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் மாற்றலாம். போராட்டங்களைக் கைவிட்டு, கூட்டிணைப்புகளை விரிவுபடுத்தலாம். மார்க்சியத்தை நாம் மண்ணுக்கேற்ற மார்க்சியமாக மாற்ற வேண்டும். அதுதான் நமது நாட்டின் தேவை. அதாவது, மார்க்சியம் ஜெர்மனியில் ஜெர்மானிய மார்க்சியமாகவும், இங்கிலாந்தில் ஆங்கிலேயே மார்க்சியமாகவும், ஃப்ரான்சில் ஃப்ரெஞ்சு மார்க்சியமாகவும் இருக்கும். அதேபோல், இந்திய மார்க்சியம் என்று ஒன்று வேண்டும். நாட்டுக்கும், பிராந்தியங்களுக்கும் ஏற்றார்போல் மார்க்சியம் வர்க்கப் போராட்டத்தைக் கைவிட வேண்டும்.

நமது மண்ணுக்கேற்ற மார்க்சியமானது அம்பேத்கர், புத்தர் மற்றும் மார்க்சின் கலவையாக இருக்கும். காந்தி பக்தர்கள், ‘காந்தியையும் நாம் இணைத்துக் கொள்ள வேண்டும்!’ என்பார்கள். சாய்பாபாவின் பக்தர்கள் ‘பாபாவையும்’ சேர்த்துக் கொள்ளச் சொல்வார்கள்.

இது எப்படி ஒரு விவேகமுள்ள இணைப்பாக இருக்க முடியும்?  வெகு காலத்திற்கு முன்னரே அந்நிய நாடுகள் இதனை முயற்சித்துள்ளன! காலதாமதாமகவும், புத்திசாலித்தனத்துடனும் சத்தியமூர்த்தி மார்க்சியத்தை மண்ணுக்கேற்ற மார்க்சியமாக்குகிறார். ஆனால் அவர் தனது அறிவை சற்று குறை அறிவோடு வெளிப்படுத்தியிருக்கிறார். புத்தர், அம்பேத்கர் மற்றும் மார்க்ஸையும் சமன்படுத்தி, ‘இம் மூன்று மாபெரும் ஆளுமைகளும்’ (திருமூர்த்திகள்) சுரண்டலும், ஒடுக்குமுறையுமற்ற ஒரு சமூகத்தைக் கனவு கண்டவர்கள், தத்துவவாதிகள் என்றார். ஆனால் பாருங்கள், மூவரையும் ஒப்பிட்டவர் அம்பேத்கரை மட்டும்தான் ‘சூரியன்’ என்கிறார்! (’அம்பேத்கர் எனும் சூரியன்’ நூலைப் பார்க்கவும், அந்தப் புகைப்படங்கள் இருக்கும் பக்கத்தில் எண் இல்லை) ‘புத்தரும் அம்பேதகரும் சுரண்டலற்ற, ஒடுக்குமுறையற்ற சமூகங்களைக் கனவு கண்டார்களா’ எனும் கேள்வியை நான் ஒதுக்கிவிடுகிறேன். அதுபற்றி ஏதும் கேட்கக்கூட மாட்டேன். மூவரும் சமமான சிந்தனையாளர்கள் மற்றும் மாபெரும் ஆளுமைகள் என்றால், அதெப்படி அம்பேத்கர் மட்டும் ‘சூரியன்’ ஆனார்? அப்படியென்றால், புத்தர் யார்? அவர் இரண்டாம் சூரியனா? மார்க்ஸ் யார்? மூன்றாம் சூரியனா? மூவரும் சமம் என்று சொல்லிவிட்டு அம்பேத்கரை மட்டும் ’சூரியன்’ என்று சொன்னால், இதுபோன்ற கேள்விகள் எழாதா? ‘மூவரும் சூரியன்கள்’ என்று அவர் சொன்னால், ‘பூமியில் மூன்று சூரியன்கள் அல்லது இரண்டு சூரியன்கள் இருக்கிறதா’ எனும் கேள்வி தொடருமே! சரியோ தவறோ, ‘மூன்று சூரியன்கள்’ என்று ஏன் அவர் சொல்லவில்லை?

கன்ஷிராம் மற்றும் மாயாவதி போன்ற தலித் தலைவர்களின் பார்வையில் அம்பேத்கர் சூரியனாக இருப்பது சரி, ஏனென்றால் அவர்களைப் பொறுத்தவரை அம்பேத்கர் மட்டுமே இருக்கிறார், மார்க்ஸ் இல்லை. ஆனால், சத்தியமூர்த்தியின் வாதப்படி, ஒற்றைக் கண் பார்வையுடைய அறிவுஜீவி இல்லை அவர். மூன்று கண் பார்வை கொண்டவர்! அம்பேத்கர் என்னும் சூரியனை அவர் எப்படி சூரியனல்லாத புத்தர் மற்றும் மார்க்ஸுடன் ஒப்பிட்டார்? மற்ற இருவருக்கும் மேலாக அம்பேத்கரை வைத்திருந்தால் மட்டுமே அம்பேத்கர் சூரியனாக முடியும். ஒட்டுமொத்த சமூகத்தையும் தம் வெளிச்சத்தால் நிரப்பும் சூரியன் அம்பேத்கர்! புத்தரும், மார்க்ஸும் அம்பேத்கரின் இடம், வலம் என்று அருகில் நிற்கலாம். அப்படி இருந்தால் மட்டுமே அம்பேத்கர் சூரியனாக இருக்க முடியும்.

சத்தியமூர்த்தி கம்யூனிஸ்ட் கட்சியை கைவிடலாம் பரவாயில்லை, ஆனால் அவர் கம்யூனிசத்தையும் கைவிட்டு அடையாள அரசியலை தம் முக்கிய குறிக்கோளாகக் கைகொண்டார். ஒவ்வொரு அடையாளக் குழுக்களும் வெவ்வேறு பிரிவுகள். அவரவருக்கு சொந்தப் பிரச்சினைகள் உள்ளது. குறிப்பிட்ட பிரச்சினையைத் தீர்க்க குறிப்பிட்ட இயக்கங்கள் தேவை! அது நியாயமானதே. ஆனால் அத்தகைய அடையாளக் குழுக்களிடம் என்ன தீர்வு இருக்கிறது? பூர்ஷுவாமயமாதல்!

பூர்ஷுவாமயமாதல் மட்டுமே மார்க்சியத்திலிருந்து வர்க்க உணர்வை பிரிக்கக் கூடியது. நாம் பூர்ஷுவாக்களாக வேண்டும்! நாம் பூர்ஷுவா ஆட்சியாளர்களாக வேண்டும்! அது நடந்தால் அது ஒரு தலித் அறிவுஜீவிக்கு நல்லது. ஒரு தலித் முதலாளி ஆனால், தனக்குக் கீழ் ஆயிரக்கணக்கான தலித்துகளை தொழிலாளர்களாக அமர்த்தி சுரண்டிப் பிழைப்பது அவருக்கு ஆனந்தம் தரலாம். இத்தகைய குறுங்குழுவாத இயக்கங்கள் அத்தகைய தலித் வளர்ச்சியையே விரும்புகின்றன.

அடையாள, குறுங்குழுவாத இயக்கங்களின் செயல்பாட்டாளர்கள் தங்களுடைய பாத்திரம் என்ன, தங்களுடைய இடம் என்ன என்பதை மறந்துவிடுகிறார்கள். சமத்துவமற்ற உற்பத்தி உறவுகளில் அவர்களுடைய அடையாளக் குழு சிறைபட்டுக் கிடப்பதை அவர்கள் உணர்வதில்லை. தமது குழுக்கள் சுதந்திரமானவை, தங்களுடைய பிரச்சினைத் தனியானது மற்ற பிரச்சினைகளோடு தொடர்பில்லை, ஆகவே தனியான தீர்வைப் பெற முடியும் என்று அவர்கள் கனவு காண்கிறார்கள்.

பூமியானது, தன்னைத் தானே சுற்றி வருவதோடு, சூரியனையும் சுற்றி வருகிறது. இயற்கை விதி அது. ஒவ்வொரு குழுக்களுக்கும் அத்தகைய சட்டம் பொருந்தும். ஒவ்வொரு குழுக்களும் தங்களுடைய குறிப்பிட்ட பிரச்சினையைச் சுற்றி வருவதோடு, தனது வர்க்க உணர்வையும் சுற்றி வரவேண்டும். இல்லையென்றால் எந்த அடையாள-சூரியனும் எந்த அடையாளக் குழுக்களையும் காக்க இயலாது.

தலித் சாதிகளுக்காக அம்பேத்கர் எனும் சூரியன் ஏற்படுத்திய இடஒதுக்கீடு எனும்  வெளிச்சம் எத்தனை காலம் தொடரும்? உலகம் இருக்கும் வரையிலுமா? அப்படியென்றால் கீழ்நிலை சாதிகளும் அப்படியே இருக்க வேண்டும் இல்லையா? சாதி இருந்தால் மட்டுமே இடஒதுக்கீடு இருக்கும், இல்லையா?

ஆனால், இடஒதுக்கீடு என்பதும் ஒருவகையான பாகுபாடே. அது சுய-மரியாதை இன்மையைக் காட்டுகிறது. இடஒதுக்கீட்டை தற்காலிக நிவாரணமாகக் கருதி நிரந்தர தீர்வை நாம் தேடிப்போக வேண்டாமா? இல்லை இடஒதுக்கீட்டை நிரந்தரமாக்கி, கீழ்நிலை சாதிகளின் நிலையையும் என்றென்றைக்கும் தக்கவைக்கப் போகிறோமா?

சரி, இடஒதுக்கீடு என்பது தற்காலிக நிவாரணம் என்றால் சாதியமைப்பை ஒழிக்க நிரந்தரத் தீர்வு என்னது? கலப்புத் திருமணங்கள் ஒரு தீர்வு என்று அனைவருக்கும் தெரியும். சரி, கலப்புத் திருமணங்களைச் சாத்தியப்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும்? இதற்குப் பாதை தெரிய, ஒரு நூறு கலப்புத் திருமணங்களையாவது ஆய்வு செய்ய வேண்டும். (அம்பேத்கருடையதையும் சேர்த்து). என்னக் காரணங்களால் அந்த கலப்புத் திருமணங்கள் சாத்தியமாயிற்று என்று பார்க்க வேண்டும். ஒட்டுமொத்த சமூகத்திலும் கலப்புத் திருமணங்கள் நிகழ்வதற்கான நிலைமையை உருவாக்குவது அவசியம். இதுவே சாதி ஒழிப்பிற்கு நிரந்தர தீர்வு, இல்லையா?

மார்க்சியத்தை மண்ணுக்கேற்ற மார்க்சியமாக மாற்ற நினைக்கும் அறிவுஜீவிகள் கொஞ்ச நஞ்சமல்ல. அனைத்து கம்யூனிஸ்ட் கட்சிகளிலும் அவர்களைக் காணலாம். புச்சலப்பள்ளி சுந்தரைய்யாவை ‘மார்க்சிய காந்தி’ என்று குறிப்பிட்ட ஒரு கட்டுரையை சமீபத்தில் படித்தேன். ஒரு மார்க்சியருக்கும் காந்திக்குமான ஒப்புமைதான் சாத்தியமா? காந்தியின் எளிமையைப் பராமரிப்பதுதான் உண்மையில் மிகவும் செலவுமிக்கதாக இருக்கிறது என்று ஒருமுறை சரோஜினி நாயுடு குறிப்பிட்டதை இந்தக் கட்டுரையாளர் கேள்விப்பட்டதில்லையா? பகத்சிங்கின் மரணதண்டனைக்கு காந்திதான் காரணமாக இருந்தார் என்பது அவருக்குத் தெரியாதா? இளம் பெண்களை நிர்வாணமாக அருகில் படுக்கச் செய்து, ‘நான் எனது பிரம்மச்சரியத்தை பரிசோதிக்கிறேன்’ என்று தார்மீகக் கொள்கைகளை உதிர்த்ததை அவர் அறியமாட்டாரா? எந்த வகையில் காந்தி ஒரு உதாரணப் புருஷர்? சுந்தரைய்யாவை காந்தியோடு ஒப்பிடுவது எப்படி அவரை கௌரவிப்பதாகும்? கம்யூனிஸ்ட் கட்சிகள் இதற்கெல்லாம் வெட்கப்படுவதே இல்லை. மற்றவர்களின் விமர்சனங்களுக்கு செவிமடுப்பதில்லை எனும் அளவுக்கு பிடிவாதம் கொண்டவர்களாகி விட்டனர். தங்களது கூட்டங்களுக்குப் பெரும் மரியாதையுடன் பூர்ஷுவா அமைச்சர்களை கூப்பிட்டு மகிழ்கின்றனர். இத்தகைய பழக்கங்கள் அனைத்தும் மார்க்சியத்தை பூர்ஷுவா மார்க்சியமாக மாற்றுவதற்கான வெளிப்பாடுகளே.

பூர்ஷுவாமயமாக்கப்பட்ட கம்யூனிஸ்டுகளை பாட்டாளி வர்க்கம் சகித்துக் கொண்டால், அதற்கு மண்ணுக்கேற்ற மார்க்சியம் அல்லது தேசிய மார்க்சியம் கிடைக்கும். அது, பூர்ஷுவா ஆட்சியாளர்கள் பெருந்தன்மையுடன் அனுமதிக்கும் சட்டபூர்வ மார்க்சியமன்றி வேறில்லை. அதன் விளைவாக நாம் எங்கிருக்கிறோமோ அங்கேயே இருப்போம்: அடையாளக் குழுக்கள் அதே கீழ்நிலை உடல் உழைப்பிலும்; பெண்கள்  சமையலறையிலும்!

எந்த சூரியனும் நம்மைக் காக்க இயலாது. மார்க்சியம் பூர்ஷுவாமயமாக்கப்பட்ட பின்பு சூரியன் என்ன செய்கிறதென்று பார்ப்போம்!

(சாதியப் பிரச்சினையும் மார்க்சியமும்: தொடரும் விவாதம் நூலிலிருந்து)

Apr 24, 2017

ஜோதிகாவிடம் ஒரு வேண்டுகோள்!

#ஜோதிகா பெண்களை கவர்ச்சியாக சித்தரிப்பது, முட்டாள்களாக, பெண்மைத் தன்மையை உயர்த்திப்பிடிக்கும் வகையில் சித்தரிப்பதற்கு எதிராக நீங்கள் குரல் கொடுத்துள்ளீர்கள். மிக்க நன்றி. ஒரு கதாநாயகியாக நீங்கள் இந்த பாலியல் பாகுபாட்டையும், பெண் உடல் மீதான சுரண்டலையும் மாற்ற வேண்டும் என்னும் நோக்கில் குரல் கொடுத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. சினிமாவும்கதாநாயகத் தன்மையும் சமூகத்தை, குறிப்பாக ஆண் மனங்களில் எத்தகைய தாக்கம் செலுத்துகிறது என்பதை அழகாக குறிப்பிட்டீர்கள்! மீண்டும் நன்றி!

இத்தருணத்தில் நான் உங்களை ஒன்று கேட்கலாமா? பெண்மை, பெண் உடல், காதல், கதாநாயகத் தன்மை இவற்றின் சித்தரிப்பிற்கெல்லாம் இயக்குனர்கள் மட்டும் தான் காரணமா? இவற்றை மாற்றுவது இயக்குனர்களின் பொறுப்பு மட்டும்தானா? கதை, திரைக்கதை, கதாநாயகி சித்தரிப்பு, கதாநாயகி தேர்வு போன்ற விஷயங்களில் #சூர்யா, விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களின் பங்கு என்ன என்பதை நாம் யாவரும் அறிவோம். தங்களின் படங்கள்வற்பனையாக வேண்டும் என்பதற்காக இவர்கள் பெண்களைகதாநாயகி, ஐடம் கேர்ள், வில்லனின் காதலிஎந்தெந்த வகையில் கவர்ச்சியாக பயன்படுத்துகிறார்கள் என்பதை அறியாத முட்டாள்களாக நாம் இருந்துவிட முடியாது! இந்த ஆணாதிக்க சமூகத்தின்கதாநாயகத் தன்மையைதுறக்க இவர்கள் தயாரே இல்லை.
பெண்களுக்கான இவர்களது இலக்கணம், பெண்மை பற்றிய இவர்களது விரிவுரை, ‘குடும்பப் பெண்’, ‘நல்ல பெண்’, ‘பத்தினிப் பெண்’, ‘காதலின் புனிதம்’, சமீபத்திய பாணிதமிழச்சிபற்றியெல்லாம் இவர்களின் பிரச்சாரம் மூச்சு முட்டுகிறது. அதைப் பொறுக்க முடியாமல் தான் நீங்களும் கொதித்தெழுந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

திரைத் துறையினரை நோக்கி நீங்கள் வேண்டுகோள் வைத்திருக்கிறீர்கள். இவ்வேளையில், இதே அறிவுரையை, வேண்டுகோளை கதாநாயகர்களையும், குறிப்பாக #சூர்யாவை Suriya Sivakumar நோக்கி வைக்குமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். நடிகர் சூர்யா சமூகத்தின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கவலை கொள்கிறார்! (பெண்கள் / மாற்றுப் பாலினத்தவரை வைத்து நிகழ்த்தப்படும் ) பாலியல்வாதம் மற்றும் பாலியல் சுரண்டல் என்னும் பிரச்சினையையும் அந்த பட்டியலில் சேர்க்கச் சொல்லுங்கள்.

பெண்களை மையப்படுத்தி சூர்யா படமெடுப்பது, அதிலும் திருமணத்திற்குப் பின் வீட்டில் முடக்காமல்! உங்களை கதாநாயகியாக (இப்போது மட்டும் ஏன் உங்களை முழுதும் போர்த்திய உடலாக காட்டுகிறார்) வைத்து படமெடுப்பது மகிழ்ச்சி! ஆனால் மற்ற பெண்களின் உடலை - கவர்ச்சிப் பாடல், கனவுப் பாடல் இப்படியாக - ஆபாசமாக சித்தரிப்பதை அல்லது சித்தரிக்க அனுமதிப்பதை (பாலியல் சுரண்டல்) காணும் போது கோபம் வருவதை தடுக்க முடியவில்லை! (சிங்கம் படத்தில் எத்தனை கதாநாயகிகள்?)

இந்தப் பிரச்சினை குறித்த விவாதத்தை சூர்யாவிடம் மேற்கொள்ள முடியுமா?

நன்றி
கொற்றவை.

தொடர்புடைய சுட்டி:
https://www.youtube.com/watch?v=ba_GPkSm4ec   

Apr 23, 2017

ஆத்திரக்காரர்களுக்கு........!!

சாதியப் பிரச்சினைக்கான தீர்வு நூலையொட்டி சிலரின் முகநூல் பதிவுகள் அறிவு வளர்ச்சிக்கு எந்த விதத்திலும் பயனளிக்கவில்லை! என்றாலும் அது சில சந்தேகங்களை எழுப்பத் தவறவில்லை!
சாதி பற்றிய அவதூறுகளுக்கு நான் கண்டிப்பாக பதில் சொல்லப் போவதில்லை. ஆர்வமூட்டும் வகையில் மற்றொரு ‘பாயிண்டை’ பிடித்திருக்கிறார்கள் சில ‘தலித்தியவாதிகள்’!
1. கொற்றவை மட்டும் பெண்கள் அமைப்பு வைத்திருக்கவில்லையா?
2. கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்துகொண்டு பெண்கள் தங்களை பெண்ணியவாதியாய் உணரக்கூடாது என்று சொன்னால் ஏற்றுக்கொள்வாரா?
இந்த இரண்டு கேள்விகளுக்கு பதிலளிக்க விரும்புகிறேன். தன்னிலை விளக்கம் அவசியமற்றது என்றாலும், கம்யூனிஸ்டுகள் பற்றிய ஒரு பொது புரிதலை / வெறுப்பரசியலை/ திரிபுவாதங்களை வளர்க்க முற்படும் சிலரின் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியுள்ளது.
நான் தொடங்கிய (அது ஒரு கனாக்காலம்!) அமைப்பு குறித்து:
மாசெஸ் (Movement Against Sexual Exploitation and Sexism) – பாலியல் சுரண்டல் மற்றும் பாலியல் வாதத்திற்கு எதிரான அமைப்பு! இதன் பிரதான நோக்கம் பாலியல்வாதத்தை எதிர்ப்பது (எந்தப் பாலினமானாலும்) இரண்டாவது பாலியல் சுரண்டலை (sexual exploitation) எதிர்ப்பது (இதுவும் எந்தப் பாலினத்திற்கும் பொருந்தும்).
நான் ஏற்கனவே பல முறை குறிப்பிட்டுள்ளேன், பெண்ணாக என் சுயம் பற்றிய தேடலிலிருந்தும், என விடுதலை என வளர்ந்து பெண் விடுதலை என்று பரிணமித்து பின்பு சமூக விடுதலைதான் பெண் விடுதலை! சமூக விடுதலைதான் அனைவருக்குமான விடுதலை என்பதை உணர்ந்து மார்க்சியத்தை ஏற்றுக்கொண்ட ஒரு ‘பெண்ணாக’ மாறினேன். நான் விரும்புவது ஒட்டுமொத்தமான மானுட விடுதலை! (இன்னும் சொல்லப்போனால் நான் என்னைப் பெண்ணாக உணர்வதையே விரும்புவதில்லை!)
இது இப்படியிருக்க, மாசெஸ் அமைப்பின் focus area பெண்கள் பிரச்சினையில் குறிப்பிட்டதொரு அம்சத்தை எடுத்துக் கொள்ள முனைந்தது. இங்கேயும் மார்க்சியத்தை கற்க ஆரம்பித்த தொடக்க காலத்தில், அறிவுநிலை கட்டமைப்பை குறிவைத்து பேசுவதையே விருபினேன். அந்த வகையில், ஆணாதிக்க சமூகத்தின் பெண்-பெண்மை / ஆண்-ஆண்மை என்னும் கருத்தியலை ஈவு இரக்கமின்றி தூக்கிப் பிடிக்கும் காட்சி ஊடகம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதை, பிரதான நோக்கமாக எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆனால் அதை மட்டுமே இலக்காக வைத்து இயங்குவது என்று என்றைக்குமே இந்த அமைப்பு வரையறுத்துக் கொள்ளவில்லை.
Vision:
MASES believes in an Egalitarian Society. It strives towards egalitarianism by speaking to protect the rights of the excluded, women and children . Our Vision is for an egalitarian Society in which the rights and the needs of the excluded are addressed without any discrimination on the basis of gender, caste, religion, culture, class, politics, health and education.
Objective:
M.A.S.E.S – Movement Against Sexual Exploitation is a movement started with a primary objective to disseminate knowledge on Sexist Representations in Media. We strongly believe that Media has played key role in propagating and sustaining the Patriarchal values and gender discrimination. With its influence People have been conditioned to believe Gender characteristics is natural.
MASES is against all forms of discrimination and We commit ourselves primarily to expose Gender Stereotyping in Advertisements and other media. MASES is also keen in exposing various forms of violence against women, which includes sexual harassment, Rape and Honor Killing. MASES has been actively involved in fact finding work.
சகல தளங்களிலும் ஏற்றத்தாழ்வை களைவது! அதற்கு தேவைப்படும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது இதுதான் இவ்வமைப்பின் மைய்ய நோக்கு. அமைப்பு என்று சொல்வதை விட ஃபோரம் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் இது முறையான அமைப்பாக நிறுவப்படவே இல்லை. தொடக்கத்திலேயே எச்சரிக்கையாக இருந்தேன். நிதி பட்டுவாடாக்கள் கூடாது என்பதால், முதலிலேயே இது ஒரு ஜீரோ ஃபண்டட் அமைப்பு என்று பதிவு செய்திருக்கிறேன்!
எப்படியெல்லாமோ வளர்த்தெடுக்க வேண்டும் என்ற கனவுகளோடு தொடங்கப்பட்ட போதிலும் இது நிதி பெற்று செயல்படும் நிறுவனமாக மாறிவிடக்கூடாது என்னும் அச்சத்தினாலேயே தொடங்கிய புள்ளியிலேயே இன்னும் இருக்கிறது. சில தோழர்களோடு இணைந்து ஒரு சில விஷயங்களை முன்னெடுத்தபோதும், இதை ‘அமைப்பு’ என்று சொல்வதற்கோ, குறிப்பாக பெண்ணிய அமைப்பு என்று சொல்வதற்கோ ஏதுமில்லை!
ஆனால் அன்றைக்கு (2010-11) எனக்குத் தெரிந்ததெல்லாம், எந்த ஒரு பிரச்சினையையும் பேச ஓர் அமைப்பு வேண்டும், அதற்கென ஒரு செயல் திட்டம் வேண்டும். இந்த அறிவும் மார்க்சியத்தைக் கற்றதால் (வசுவுடன் இணைந்ததால்) வந்த அறிவு. ஆனால் நான் எடுத்துக்கொண்ட இந்த சிறு செயல்வெளிக்கு ஒரு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்பட ஏதுமில்லை என்பது எனது அப்போதைய புரிதல். மேலும் கம்யூனிஸ்ட் கட்சி, அவர்களின் செயல்திட்டங்கள் இவைபற்றியெல்லாம் ஏதுமறியாத, அவற்றை ஆய்வுசெய்யக்கூட தெரியாத ஒரு தொடக்க நிலை!
இப்படி தொடங்கி, உண்மை அறியும் குழு என்றெல்லாம் இயங்கி, பின்பு அதனால் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களின் காரணமாக ‘களப்பணி’ என்று சொல்லப்படும் ஒரு வெளியிலிருந்து தற்காலிகமாக விலகிக்கொள்வது! முதலில் இந்த சமூகப் பிரச்சினைகளை தெளிவாக ஆய்வு செய்யத் தேவைப்படும் அறிவை வளர்த்துக்கொள்வது, அவற்றை பரப்புரை செய்வது என்னும் தளத்தில் இயங்குவோம், பிறகு மற்றவற்றைப் பார்ப்போம் என்று முடிவு செய்து ‘இயக்கத்தை விட்டு வெளியேறி’ எழுத்தில் என்னை முடக்கிக் கொண்டேன்.
அமைப்பின் வேலைதிட்ட வரைவு: https://masessaynotosexism.wordpress.com/tag/draft-agenda-2/ - இந்த வேலைத் திட்டம் கூட எவரையும் அறியாதிருந்த காலத்திலேயே இ-மெயில் வழியாக கிடைத்த இமெயில்களுக்கு வரைவுகளை அனுப்பி, சில தோழர்களை நேரில் சந்தித்து கருத்துகளைக் கேட்டு, கூட்டு முயற்சியில் உருவாக்கியது! அமைப்பில் நிதி இருக்கிறதோ இல்லையோ ஜனநாயகம் இருக்க வேண்டும் என்ற ஓர் எச்சரிக்கை உணர்வு!
2. கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்துகொண்டு பெண்கள் தங்களை பெண்ணியவாதியாய் உணரக்கூடாது என்று சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா?
பெண்களுக்கு மட்டும் என்ன விதிவிலக்கு. எந்த கம்யூனிஸ்ட் கட்சியும் அப்படி சிந்திப்பதில்லை. நானும் அப்படித்தான். கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கும் பெண்கள் தங்களை பெண்ணியவாதியாக உணரக்கூடாது. கம்யூனிஸ்டாகவே உணர வேண்டும்.
தோழர்கள் சுட்டிக்காட்டியது போல் அடையாளம் கடந்த வர்க்க உணர்வை – சாதி நீக்கம், வர்க்க நீக்கம், அடையாள நீக்கம் செய்து – ஊட்டுவது கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்பே ஆகும். ஆனால் அக்கட்சிகளிலும் சிலர் தங்களின் சுயலாபத்திற்காக இந்த அடையாளங்களை துறக்க தயாராக இல்லாதவர்களாக செயல்படுவதை அறியாதவர்கள் அல்ல நாம்!
அப்படியென்றால் பிரச்சினைகளின் தனித்தன்மைக்கேற்ப பிரிவுகள், முன்னணிகள் இருக்கக்கூடாது என்று சொல்கிறீர்களா என்னும் கேள்விக்கு பதில் – கூடாது என்று சொல்லும் வரட்டுவாதிகள் அல்ல கம்யூனிஸ்டுகள்!
பிரச்சினைகளின் தனித்தன்மைக்கேற்ப, அந்தந்தப் பிரிவு மக்களை ஒருங்கிணைக்க தனித் தனி முன்னணிகள் தேவை (தனிக் கட்சிகள் அல்ல). ஆனால் அவை எந்த தத்துவத்தின் அடிப்படையில், எந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் கட்டப்படுகிறது, அதன் இறுதி இலக்கு அனைவருக்குமான விடுதலையை உறுதி செய்யும் பாதையில் சங்கமிக்குமா? ஏற்றத்தாழ்வற்ற பொதுவுடைமை சமுதாயத்தைப் படைக்க உதவுமா என்பதே இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியது.
அடுத்து, முன்னணிகள் என்று வரும்போதும் அந்தப் பிரிவின் செயல் திட்டம், மூல உத்தி, செயல் உத்தி இதெல்லாம் கவனிக்கப்பட வேண்டியவை. ஆகவே, தோழர்களே,
பெண் விடுதலை முன்னணி அவசியமா? அவசியம் – (அதாவது அவசியமில்லை என்று சொவதற்கில்லை)
சாதி ஒழிப்பிற்கான முன்னணி அவசியமா? அவசியம்.
விவசாயிகள், மாணவர்கள், என்று ஒவ்வொரு பிரச்சினைக்குமான முன்னணி கட்டுவதை யாரும் இங்கு மறுக்கவில்லை! ஆனால்! தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்றால் என்ன? சாதி இருக்கட்டும், தீண்டாமையை ஒழிப்போம் என்பதா என்னும் கேள்வி எனக்கு எழும் (கேள்வி கேடலாம் தானே). தலித் விடுதலை முன்னணி என்று கட்ட நினைத்தால் – அப்படியென்றால் சாதி வாரியாக முன்னணிகள் கட்டுவீர்களா என்ற கேள்வி எனக்கு எழும்?
கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து கொண்டு அல்லது ஒரு மார்க்சிஸ்டாக இருந்து கொண்டு பெண் விடுதலை பேசலாம், ஆனால் பெண்ணியம் (பெண்ணியவாதி) என்ற தனிப்பிரிவாக இயங்கக் கூடாது! சாதி ஒழிப்பு பேசலாம் – ஆனால் தலித்தியவாதியாக இயங்கக் கூடாது! சிறுபான்மையினர் விடுதலை பேசலாம் ஆனால் ஒரு மதவாதியாக இயங்கக் கூடாது! விவசாயிகள் விடுதலை பேசலாம் ஆனால் தம் வர்க்க நலனிலிருந்து (நிலப்பிரபுத்துவ வர்க்க நலனிற்காக) இயங்கக் கூடாது!
ஆகவே தோழர்களே! மீண்டும் மீண்டும் சொல்கிறேன் –
நான் பெண்ணியவாதி அல்ல! மார்க்சியவாதி!
நான் எப்படி சாதி மறுப்பாளரோ அப்படியே அடையாள அரசியல் மறுப்பாளர்!
நான் மானுட விடுதலை பேசிக்கொண்டிருக்கிறேன்! அதற்கு அவசியத் தேவையாக இருக்கும் மார்க்சியக் கோட்பாடு குறித்து பேசிக்கொண்டிருக்கிறேன். ஆனால், இந்த அடையாள அரசியல்வாதிகளும், அதன் ஆதரவாளர்களும் குறிப்பிட்ட பிரிவினரின் குறிப்பிட்ட பிரச்சினையை – ஒடுக்குமுறையை களைய முற்பட்ட, குறிப்பிட்ட எல்லைவரை ஒரு சில ‘நிவாரணங்களை’ பெற்றுத் தந்த சில வழிகாட்டுதல்களை முன்வைத்து அதுவே தீர்வு என்று பேசுவதை விமர்சனத்திற்கு உட்படுத்தும் உரையாடலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறேன். இது அறிவுச் செயல்பாடு பொருள்முதல்வாதிகள் இப்படித்தான் இயங்க முடியும்! தொழுகை மனப்பான்மையில் இயங்குபவர்கள் கருத்துமுதல்வாதிகள்! அவர்கள் ஆத்திரக்காரர்கள்!
ஆத்திரக்காரர்களுக்கு……… !!!!!
நன்றி
கொற்றவை

Apr 19, 2017

அம்பேத்கரை விமர்சிப்பது அவசியமா?

அம்பேத்கர் மட்டுமின்றி கார்ல் மார்க்ஸ் உள்ளிட்ட எவரையும் விமர்சனபூர்வமாக அனுகுவதே அறிவுச் செயல்பாடு.
நாங்கள் ஏன் அம்பேத்கரை தொடர்ந்து விமர்சித்து வருகிறோம்?
சாதிய ஒடுக்குமுறை என்பது இந்தியாவின் மிகக் கொடூரமான சமூக அமைப்பு.
உழைக்கும் வர்க்க மக்கள் சாதிய வன்கொடுமையால் சொல்லொணா துயரத்தை அனுபவித்து வருகிறார்கள்.
தனியுடைமையின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வு மிக்க உழைப்பு பிரிவினைக்கு சாதியமைப்பு பெரும் துணையக இருக்கிறது.
சமத்துவத்தை நிலை நாட்டுவதற்கான போராட்டப் பாதையில் சாதி ஒழிப்புக்கான வேலை திட்டம் என்பது மிக முக்கிய தேவையாக இருக்கிறது.
இந்தியாவில் உழைக்கும் வர்க்க அணி திரட்டலுக்கும், புரட்சிகர பாதையில் ஒருங்கிணைப்பதற்கும் சாதி ஒரு பெரும் பிரச்சினையாக இருக்கிறது.
சாதி ஒழிப்பு என்று பேசும்போது கோட்பாட்டு பூர்வமாக, இரண்டு கோட்பாடுகளுக்கிடையில் ஏறத்தாழ 50 ஆண்டுகாலமாக விவாதங்கள் நடந்து வருகின்றன. (குறிப்பாக அம்பேத்கருக்குப் பிந்தைய சிலக் குழுக்களின் பிழைப்புவாத தலித் அரசியல்...... (அவரை முன் வைத்து)....)
இந்தப் பின்னணியில் அனைத்துவிதமான ஒடுக்குமுறை மற்றும் சுரண்டலை ஒழித்து சமத்துவத்தை அடைய வழிகாட்டக்கூடிய கோட்பாடான மார்க்சியத்திற்கும், சாதிய ஒடுக்குமுறையை (சாதியை) ஒழிப்பதற்கான ‘கோட்பாடாக’ சொல்லப்படும் ‘அம்பேத்கரியம்’ என்னும் அடையாள அரசியலும் மோதுகின்றன.
சாதியமைப்பு பற்றி முழுமையாக தான் கண்டுபிடித்து விட்டதாகவும், சாதி ஒழிப்பிற்கு தீர்வை கண்டுபிடிதுவிட்டதாகவும் அம்பேத்கர் முன் வைக்கிறார். ஆகவே சாதியப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து மார்க்சியக் கண்ணோட்டத்தில் அவற்றை ஆய்வு செய்வது அவசியமானதே. (இன்னும் ஒரு படி மேலே சென்று அம்பேத்கர் சாதியை ஒழித்து விட்டார் என்று சொல்லும் தலித் முரசு போன்ற ‘தலித்திய’ கண்டுபிடிப்புகளையும் கணக்கில் கொள்ள வேண்டும்).
ஆர். எஸ்.எஸ்., சாவர்கர், பா.ஜ.க கும்பலின் இந்துத்துவ பாசிச முகம் அனைவரும் அறிந்ததே! மேலும், இவர்கள் யாரும் சாதி ஒழிப்பிற்கான கோட்பாட்டை நாங்கள் வைத்திருக்கிறோம் என்று ஆய்வுகளை எழுதவில்லை! அவர்கள் நம் எதிரிகள், வலதுசாரிகள், மதவாதிகள் என்பது வெளிப்படையானது.
ஆகவே, உழைக்கும் வர்க்க மக்களின் விடுதலைக்காக (தலித் மக்கள் உள்ளிட்ட) அரசியல் களமாடும் சக்திகளுக்குள் இருக்கும் முரண்பாடு, அவர்கள் முன் வைக்கும் ‘இயம்’, கோட்பாடு ஆகியவை பற்றிய ஆய்வும் விவாதமும் தவிர்க்கவியலாதது. (ஏன் இதை செய்கிறீர்கள் என்று கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்பது வேறு விசயம்!)
உழைக்கும் வர்க்கம் பிளவு பட்டு நிற்கிறது. தலித்தியம் போன்ற அடையாள அரசியல் மீண்டும் மீண்டும் சாதியை வலுப்படுத்தவே உதவுகிறது! மேலும், உழைக்கும் மக்களை சுரண்டவும், சாதியை அதற்கான ஓர் ஆயுதமாய் பயன்படுத்தும் முதலாளித்துவ ஒழிப்பு குறித்து தலித்தியம் மாற்றுக் கருத்துகளை முன் வைக்கிறது. பகுதியளவில் முதலாளித்துவ ஆதரவு பேசும் பிரிவுகளும் உள்ளன.
தலித்தியம், பின்நவீனத்துவம் உள்ளிட்ட அடையாள அரசியல் பிரதானமாக மார்க்சிய வெறுப்பை போதிப்பவை. இது உழைக்கும் வர்க்கத்திற்கு எதிரான அரசியல் என்பதால் இவற்றை தீவிரமாக எதிர்ப்பதும், இவ்வரசியலை முன்னெடுக்கும் ‘அறிவுஜீவிகளிடமிருந்தும்’, அரசியல்வாதிகளிடமிருந்தும் உழைக்கும் வர்க்க மக்களை மீட்டெடுப்பது பொதுவுடைமையை நிலை நாட்ட விரும்பும் ஒவ்வொருவரின் கடமை என்பதும் என் வரையிலான கருத்து.

எல்லாவற்றுக்கும் மேலாக, , ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலைப் போராட்டம் என்னும் அரசியலை பேசிக்கொண்டு கம்யூனிஸ்டுகளை எப்போதும் வசை பாடுவதும், மார்க்சிய வெறுப்பு பேசி உழைக்கும் மக்களை பிளவுபடுத்துவதும் யாரோ / எந்த ‘இயமோ’ அது பற்றிய ஆய்வு மிக மிக அவசியமாகிறது!
இப்படி பல காரணங்கள் உள்ளன…. நூல்களில் அவையெல்லாம் விரிவாகவே கூறப்பட்டுள்ளது. மீண்டும் மீண்டும் சாவர்க்கரை ஏன் விமர்சிக்கவில்லை, அருண் ஷோரி நூலை ஏன் மொழிபெயர்க்கவில்லை போன்ற சிறுபிள்ளைத்தனமான நகைச்சுவையை விட்டுவிட்டு, உழைக்கும் வர்க்க மக்களின் விடுதலைக்கான சரியான பாதையை சார்பின்றி, அறிவியல் பூர்வமாக முன் வைக்கவும், விவாதிக்கவும் முயற்சி செய்யுங்கள்.
(பி.கு: இந்தப் பழைய ஜோக்குகளுக்கு வயிறு வலிக்க சிரித்து நான் ஓய்ந்துவிட்டேன். மேலும் polemics என்பது ஒரு நூல் வந்ததை ஒட்டி தொடரும் விவாதம்... இந்த அரிச்சுவடி பாடங்களைக் கூடவா எடுக்க வேண்டும்!)

Apr 18, 2017

தலித்தியம், மார்க்சியம் - சில கேள்விகள்

சாதியப் பிரச்சினைக்கான தீர்வு: புத்தர் போதாது! அம்பேத்கரும் போதாது! மார்க்ஸ் அவசியத் தேவை என்னும் நூல் வெளிவந்ததை ஒட்டி வந்த ‘வசைகளுக்கு’ எதிர்வினையாக கொண்டுவரப்பட்ட நூல் சாதியப் பிரச்சினையும் மார்க்சியமும்: தொடரும் விவாதம்…. அந்நூலின் இறுதியில் பின் வரும் கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன.

வாசகர்களுக்கான கேள்விகள்

‘ஆய்வுபூர்வமான’, ‘அரசியல்பூர்வமான’ விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கும் இச்சூழலில், எந்த தாக்கங்களுக்கும் ஆளாகாமல் வாசகர்கள் ரங்கநாயகம்மாவின் சாதியப் பிரச்சினைக்கான தீர்வு… நூல் மட்டுமல்லாது அம்பேத்கர் பற்றிய விமர்சனத்திற்கான தேவையையும், அது முன்வைக்கும் கேள்விகளையும் / விமர்சனங்களையும் புரிந்துகொள்ள அல்லது சீர்தூக்கிப் பார்க்க பின்வரும் கேள்விகள் உதவலாம். அரசியல் பாதை மற்றும் தத்துவார்த்த புரிதல் குறித்த மறுவாசிப்பை, மறுஆய்வைக் கோருவதாகவும் இது அமையலாம்.

1. அம்பேத்கரியம் என்றால் என்ன? அதன் உருவாக்கம் மற்றும் வரலாற்று வளர்ச்சி எத்தகையது?

2. அம்பேத்கர் முன் வைத்த சாதி ஒழிப்புத் திட்டங்கள் யாவை?அத்திட்டங்களினால் சாதி ஒழிப்பு போராட்டம் அடைந்துள்ள முன்னேற்றம் என்ன?

4. அம்பேத்கர் முன்வைத்த சாதி ஒழிப்புத் திட்டங்கள் அனைத்தும் விஞ்ஞானப்பூர்வமானதா? நடைமுறையில் சாதியை ஒழிக்கக்கூடியதா?

5. இடஒதுக்கீடின் வரையறை குறித்து அம்பேத்கர் ஏதேனும் கூறியிருக்கிறாரா? நடைமுறையில் இடஒதுக்கீட்டைப் பகிர்ந்துகொள்வதில் தலித்துகள் மத்தியில் ஒற்றுமை நிலவுகிறதா?

6. சாதியின் தோற்றம் மற்றும் வளர்ச்சி குறித்த அம்பேத்கரின் ஆய்வுகளில் முரண்கள் ஏதேனும் இருக்கிறதா? சாதியின் தோற்றத்தை முழுமையாக அவர் நிறுவுகிறாரா?

7.  அம்பேத்கர் முன் வைத்த புத்தர் எத்தகையவர்? அவர் முன் வைத்த பௌத்தம் எத்தகையது?

8.  அம்பேத்கர் பௌத்தத்திற்கு மாறியதால் சாதி ஒழிப்பு போராட்டம் அடைந்த முன்னேற்றம் என்ன?

9. மீதமுள்ள தலித்துகளும் பௌத்தத்திற்கு மாறிவிட்டால் சாதி ஒழிந்துவிடுமா? அவர்களின் பொருளாதார வளர்ச்சிக்கும், சமூக முன்னேற்றத்திற்கும் அது எந்த வகையில் உதவும்?

10. அம்பேத்கரின் உலகக் கண்ணோட்டம் எத்தகையது? அவரது பொருளாதார கண்ணோட்டம் எத்தகையது?

11. சுதந்திரப் போராட்ட காலத்தில் தேசிய இயக்கப் போராட்டங்களின் போது பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசின் இருப்பு, ஆதிக்கம் குறித்த அம்பேத்கரின் அணுகுமுறை எத்தகையது? அதில் நிறை குறைகள் ஏதேனும் உள்ளதா? தலித்துகளை புரட்சிகரமாக ஒருங்கிணைப்பதில் அப்போது அதன் முக்கியத்துவம் என்ன?

12. தெலுங்கானா போராட்டம், தெபாகா எழுச்சி போன்று நாடெங்கும் நடந்த வர்க்கப் போராட்டம் குறித்த அம்பேத்கரின் கருத்து யாது?

13. அப்போராட்டங்கள் என்னவிதமான கோரிக்கைகளை, தீர்வுகளைக் கோருபவையாக இருந்தன? அதனையொட்டிய அதுபோன்ற வர்க்கப் போராட்டங்களின் அவசியம் குறித்த அம்பேத்கரின் பார்வை யாது?

14. வர்க்கப் போராட்டங்களுக்கு காரணமாக இருக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க அம்பேத்கரின் திட்டங்கள் யாது? அதன் நிறை குறைகள் யாவை?

15.  சாதி பற்றிய அம்பேத்கரது ஆய்வுகள் முற்றிலும் சரியானதா? (தலித்துகள் மற்றும்) தலித்துகள் அல்லாத மற்ற உழைக்கும் வர்க்கங்கள் மீதான அரசியல் பொருளாதார ஒடுக்குமுறைக்கு அம்பேத்கரிடம் தீர்வு உள்ளதா? பாலினப் பாகுபாடு உள்ளிட்ட மற்ற பாகுபாடுகளைக் களைந்திட அப்பொருளாதார திட்டங்கள் உதவக்கூடியதா?

16. வாடகை, வரி, வட்டி, உழைப்புச் சுரண்டல், அரசு, இராணுவம், நீதித்துறை பற்றிய அம்பேத்கரின் புரிதல் எத்தகையது? அதன் சாதக பாதகங்கள் யாவை?

17.  காங்கிரஸ் எதிர்ப்பு அதன் பின்னரான இணைப்பு – இதனால் ஏற்பட்ட நன்மை தீமை அல்லது முரண்பாடு விமர்சனத்திற்கு உரியதா இல்லையா?

18.  அம்பேத்கர் முன்வைத்தது சோஷலிசம்தானா? அதை நடைமுறைப்படுத்த முடியுமா? அதன் நிறை குறை யாது?

19.  மார்க்சியம் – கம்யூனிசம் – பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் குறித்த அம்பேத்கரின் புரிதல் சரியானதா?

20. அம்பேத்கர் கார்ல் மார்க்ஸை அல்லது மார்க்சிய மூல நூல்களை படித்ததற்கான சான்றுகளை அவரது எழுத்துக்களில்,ஆய்வுகளில் காணமுடிகிறதா?

21.  மார்க்சியம் – கம்யூனிசம் – பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் வன்முறை நிறைந்ததா?

22. பணம், மதிப்பு, உழைப்பு, உழைப்புப் பிரிவினை, உற்பத்தி முறைகள், உற்பத்தி உறவுகள், உற்பத்திச் சக்திகள், தனியுடைமை (சொத்துறவு) குறித்து பொருளாதார அறிஞரான அம்பேத்கர் அவர்களின் பார்வை என்ன?

23. மதம் மக்களுக்கு அவசியமா? மதம் மற்றும் ஆன்மீகம் குறித்த மார்க்சியக் கண்ணோட்டம் என்ன? மார்க்சியம் முற்றிலுமாக மதம் / ஆன்மீகத்தை மறுக்கிறது என்று சொல்லப்படுவது உண்மையா?

24.  கம்யூனிஸ்ட் மற்றும் இதர புரட்சிகர கட்சிகளின் சமூக-அரசியல்-பொருளாதார திட்டங்களுக்கும் அம்பேத்கரின் திட்டங்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன? தத்துவார்த்த அடிப்படையில் எந்தத் தத்துவம் எந்த வர்க்கத்தின் பிரதிநிதியாக இருக்கிறது?

25. மார்க்சியம் பற்றிய எதிர்மறைக் கருத்து கொண்டிருந்தாலும் அம்பேத்கரியம் (அம்பேத்கர் அல்ல) என்று சொல்லப்படும் ஒன்றை இணைக்கச் சொல்லும் தேவை (சில) மார்க்சிய அமைப்புகளுக்கும், நபர்களுக்கும் ஏன் எழுகிறது.

26. இணைப்பு என்றால் அது எத்தகைய இணைப்பு? நடைமுறை சார்ந்த ஒருங்கினைப்பின் அவசியத்தை இங்கு யாரும் மறுக்கவில்லை, ஆனால் தத்துவார்த்த அடிப்படையில் அம்பேத்கரியர்கள் மார்க்சியத்தை ஏற்றுக்கொள்கிறார்களா? ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் சாதி ஒழிப்பு மற்றும் வர்க்கப் போராட்ட ஒருங்கிணைப்பில் அது எவ்வகை செயல்திட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கும்?

மேற்சொன்ன ஆய்விற்குப் பயன்படக்கூடிய சில நூல்கள்:

1.  அரசியல் பொருளாதார விமர்சனத்திற்கு ஓர் பங்களிப்பு
2.  கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
3.  மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள்
4.  அரசும் புரட்சியும், லெனின்
5.  குடும்பம், அரசு, தனிச்சொத்து ஆகியவற்றின் தோற்றம், எங்கெல்ஸ்
6.  அம்பேத்கர் நூற் தொகுதிகள்
7. அறிவியல் தத்துவம் சமுதாயம்.- தேவிபிரசாத் சட்டோபாத்யாயா, தமிழில் அ. குமரேசன், அலைகள் வெளிட்டகம்.
8. சாதியும் வர்க்கமும், தொகுப்பு: இல. கோவிந்தசாமி, அலைகள் வெளியீட்டகம்.
9.தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டக் கருத்துக்கள், பேரா. ந. வானமாமலை, பாரதி புத்தகாலயம்.
10.  சாதியம், முனைவர் கோ. கேசவன், சரவணபாலு பதிப்பகம்.
11. அம்பேத்கரும் சாதி ஒழிப்பும், முனைவர் கோ. கேசவன்,
12. அம்பேத்கர் ஓர் ஆராய்வு, W.N. குபேர், தமிழாக்கம் சே. கோச்சடை, இராஜாராம், சரவணபாலு பதிப்பகம்.
13.  அம்பேத்கரை முன்வைத்து, மு.ரா. முருகன், செம்மை வெளியீடு.
14.  மார்க்சியப் பார்வையில் அம்பேத்கர், பி.பி. சான்ஸ்கிரி, பாரதி புத்தகாலயம்
15.  விடியலுக்கான இந்தியப் பாதை 101 கேள்விகள், சரத் சந்திரா, பாரதி புத்தகாலயம்.
16. https://www.marxists.org/tamil/marx/1886/feuerbach.htm, மற்றும் இதில் உள்ள மார்க்ஸ், எங்கெல்ஸின் இதர கட்டுரைகள்.
17.  ஆனந்த் டெல்டும்டே நூல்கள்.
18.  கோசாம்பி, சட்டோபாத்யாயா, ஆர்.எஸ். ஷர்மா ஆகியோரின் நூல்கள்.
19.  சாதி ஓர் கண்டுபிடிப்பு, முனைவர் வெ. கண்ணுப்பிள்ளை, வளரும் சமுதாயப் பதிப்பகம்.
20.  விநோத் மிஸ்ரா படைப்புகள், தீப்பொறி வெளியீடு.
21. மௌரியருக்குப் பிற்பட்ட குப்தர் கால வருவாய் அமைப்பு முறை, டி.என்.ஜா,  
      நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட்
22. அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு நீதியும் அநீதியும், அரங்ககுணசேகரன்.
23. அருந்ததியர் உள் ஒதுக்கீடு- மதிவாணன்.கருப்புப் பிரதிகள்
24. Caste and Class: A Marxist  Viewpoint A Collection of polemical Articles,
 Ranganayakamma, Rahul foundation.
25. Caste Question and Marxism, arvind memorial trust

(பட்டியல்முழுமையானதல்ல)